SuperTopAds

இந்தியா மீது எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது..! டக்ளஸ் பகிரங்கம்..

ஆசிரியர் - Editor I
இந்தியா மீது எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது..! டக்ளஸ் பகிரங்கம்..

சர்வதேசம் மீது எனக்கு சிறிதளவும் நம்பிக்கையில்லை. ஆனால் இந்தியா மீது எனக்கு அதிகளவான நம்பிக்கை இருக்கின்றது. என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார். 

வவுனியாவில் வாடிவீட்டில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலே தீர்க்கப்பட முடியாத நாளாந்த பிரச்சினைகள், அபிவிருத்திகள், 

வீட்டுத்திட்டங்கள், வேலைவாய்ப்புக்கள், வீதிகள் போன்ற பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற மக்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி வந்திருந்தார்கள். இது தொடர்பாக அம்மக்களுடன் கலந்துரையாடி மக்களின் 

நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகத் தெரிவித்துள்ளேன். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சரியான தேர்வைச் செய்யவில்லை என்ற எனது மன ஆதங்கத்தையும் தெரிவித்திருக்கிறேன். 

வர இருக்கின்ற காலங்களிலே தமிழ் மக்கள் சரியான தெரிவை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். வடமாகாண ஆளுநராகச் சரியான ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும் என்று அரச தலைமை ஆலோசனை செய்துகொண்டு இருந்தது. 

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரைத் தெரிவு செய்து நேற்று அமைச்சரவையின் அங்கீகாரத்தையும், அதனுடைய ஆசியையும் ஆட்சியாளர்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். 

அதனடிப்படையில் வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் வெகுவிரைவில் வடமாகாண ஆளுநர் பொறுப்பை எடுத்துச் சிறப்பாகச் செயற்படுவார் என நம்புகின்றேன். தமிழ் மக்களுக்கு இடையில் தமிழ் கட்சிகள் ஐக்கியம் 

என்று பேசுவது ஒரு சுயலாப அரசியலாகும். வாக்குகளை அபகரிப்பதுதான் அவர்களின் நோக்கமே ஒழிய மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதல்ல. 1977ஆம் ஆண்டிலிருந்து தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கிடையில் ஐக்கியம் அவசியம், 

அத்துடன் நடைபெறுகின்ற எந்த தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளைக் கூட்டாகத் தெரிவு செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளிற்கு தீர்வுக்கான முடியும் என்று மக்களுக்குப் பொய் கூறி 

கடந்த காலங்களில் வாக்குகளை அபகரித்து வந்தார்கள். இன்று வரை தென்னிலங்கைக்கு ஐக்கியத்தைக் காண்பிக்க வேண்டும் என்று கூறினார்கள். சர்வதேச சமூகத்துக்குக் காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்கள், 

மேலும் இதன் ஊடாகவே பிரச்சினை தீர்க்க முடியும் என்று தெரிவித்தார்கள். ஆனால் மக்களுடைய பிரச்சினைகள் தீராத பிரச்சினையாக இழுபட்டுக்கொண்டு இருக்கின்றது.தமிழ் மக்களிடம் இவர்களிற்கு தற்துணிவு இருக்குமேயானால், 

அல்லது இவர்களுக்கு மக்கள் தொடர்பான உண்மையான அக்கறை இருக்குமேயானால் இவர்கள் தனித்தனியே போட்டிப்போட்டு மக்களின் ஆணையைப் பெற்று வென்று வந்து பின்னர் ஐக்கியப்பட்டால்தான் தமிழ் மக்களுடைய பிரச்சினையை 

இலகுவாகத் தீர்க்க முடியலாம் என்பதை எனது அனுபவத்திலிருந்து சொல்கின்றேன். தமிழ் அரசியல்வாதிகள் காலத்திற்குக் காலம் வாக்குகளை அபகரிப்பதற்காக, இழந்து போன செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகப் பேசப்படுகின்ற விடயங்களே இவையாகும். 

எனக்குச் சர்வதேசத்தின் மீது நம்பிக்கை இல்லை ஆனால் இந்தியா மீது நம்பிக்கை இருக்கின்றது. அதேபோல் இதைத் தீர்மானிப்பது எங்களுடைய மக்கள். எங்களுடைய மக்கள் வருங்காலங்களில் தங்களுடைய பிரதிநிதிகளாகச் சரியானவர்களைத் 

தெரிவு செய்வார்களே ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க முடியும்.சம்மந்தர் காலத்திற்குக் காலம் பல கருத்துக்களை ஒன்றுக்குப் பின் முரண்பாடாக சொல்லி வந்தது வரலாற்றிற்கு தெரியும். 

என்னைப்பொறுத்தவரை புலித்தலைமைகள் அழிந்தமை இந்தியாவாலோ இலங்கையாலோ அல்ல. தன் வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும் என்பதை போல் தங்களிற்கு தாங்களாகவே அழிவை தேடி கொண்டார்களே ஒழிய வேறு எவையும் இல்லை.