இழுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகத்துக்குள் சுடர் விட்ட மாவீரர்கள்!

ஆசிரியர் - Admin
இழுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகத்துக்குள் சுடர் விட்ட மாவீரர்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. மாலை 6.05 மணிக்கு மாவீரர் தின ஒழுங்குக்கமைய மணியோசை ஒலிக்க, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடரேற்றப்பட்டது.

பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஒருவர் ஏற்றி வைத்தார். பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து மாவீரர் பாடல் இசைக்க கலந்து கொண்ட மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஈகச் சுடர்களையேற்றி அஞ்சலி செய்தனர்.

மாவீரர் தின ஏற்பாடுகளை முடக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியினால் இன்றும் நாளையும் மாணவர்கள் எவரும் உள்நுழையா வண்ணம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் எவையும் நடத்தப்படக்கூடாது என மாணவர் ஒன்றியத்துக்கு கண்டிப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று காலை தடைகளை மீறி பூட்டப்பட்டிருந்த பிரதான வாயிலால் உள்நுழைந்து மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள்ளிருந்து ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிற்பகல் 2 மணியுடன் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதுடன், 4 மணியளவில் பல்கலைக் கழகத்தின் பிதான நுழைவாயில் சங்கிலியால் பூட்டப்பட்டது. அத்தனை தடைகளையும் மீறி மாணவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவேந்தலை நடாத்தியிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு