கோத்தாவுக்கு போட்டால் எம்மை போட்டுத்தள்ளுவார்!
கோத்தாவுக்கு வாக்குப் போட்டால் எம்மையும் போட்டுத்தள்ளுவார் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். வவுனியா திருநாவற்குளத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வாக்களித்த மக்களுக்கு நியாயத்தை பெற்றுத்தரவேண்டும் என்ற தெளிவான ஒரு நிலைப்பாட்டை கொண்டவர் தான் சஜித் பிரேமதாச. எமது பகுதிகள் அபிவிருத்தி அடையாத நிலையில் உள்ளன. எமது படித்த இளைஞர் யுவதிகளுக்கு ஒழுங்கான வேலை வாய்ப்பு இல்லை. சுய தொழில் செய்வதற்கும் மூலதனம் இல்லை. அனைத்துமே இல்லாத நிலை தான் இங்கு இருக்கிறது. அதனை மாற்றுவதற்காகத்தான் எமது ஆட்சியைக் கொண்டுவர இருக்கின்றோம்.
இந்நாட்டிலே இனவாதம் மதவாதம் இருக்க முடியாது. நாம் அனைவரும் சகோதரர்கள். ஒருதாய் பிள்ளைகளாக வாழ வேண்டும். பெரும்பான்மை மக்களுக்குக் கைகட்டி அடிமை சேவகம் செய்துதான் சிறுபான்மை மக்கள் வாழவேண்டும் என்றால் அந்த ஐக்கியம் மனோ கணேசனுக்கு தேவையற்றது. அனைத்து மக்களும் சமமாக வாழவேண்டும். அதுவே உண்மையான சமத்துவம்.
அரசாங்கத்தை உருவாக்கி விட்டு வெறுமனே நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம்.
தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது, தேர்தலை பகிஸ்கரிப்பது, மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிப்பது என்பன கோத்தாவை ஆதரிப்பதாகவே அமையும். கோத்தாவிற்கு வாக்குப் போட்டால் எம்மைப் போட்டுத் தள்ளுவார். வெள்ளை வேன் வரும்.
கடத்தல், காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறும். எனவே ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றால் சஜித்துக்கு வாக்களியுங்கள். எதிர்வரும் 16ஆம் திகதி வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று அந்த கணேசனையும் நினைத்துக்கொண்டு, இந்த கணேசனையும் மனதில் வைத்து வாக்களியுங்கள் என்றார்.