SuperTopAds

ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற 11 பேர் கைது !

ஆசிரியர் - Admin
ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற 11 பேர் கைது !

இந்திய பெருங்கடலில் பிரான்சின் ஆளுகையின் கீழ் உள்ள ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற 11 இலங்கையர்களை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. 

இலங்கையின் சிலாபம் பகுதியிலிருந்து சிறிய படகுகள் சென்று பின்னர் பெரிய கப்பலில் பயணிக்க இவர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. 

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள், புத்தளம் மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் உடப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

ரீயூனியன் தீவின் மக்கள் தொகையில் இந்தியத் தமிழர்கள் முதன்மையான இடத்தில் இருப்பதும், இலங்கைத் தமிழர்கள் இத்தீவில் தஞ்சமடைவதற்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றது. 

ஜனவரி 2018 முதல் இதுவரை 290க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இவ்வாறு தஞ்சமடைந்துள்ளதாகவும் அதில் பெரும்பான்மையானோர் தஞ்சக்கோரிக்கைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே நாடுகடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த ஏப்ரல் 13 அன்று மீன்பிடி படகு வழியாக 120 இலங்கையர்கள் 4000 கிலோ மீட்டர் பயணித்து ரீயூனியன் தீவுக்கு சென்றடைந்திருந்தனர். இதற்காக ஒவ்வொருவரும் தலா 2 லட்சம் இந்திய ரூபாய் முதல் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை( 2,230-5,580 அமெரிக்க டாலர்கள்) ஆட்கடத்தல்காரர்களிடம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. 

இதனை ஆட்கடத்தல் நிகழ்வாக அணுகிய பிரஞ்சு அரசு, இவர்களை அழைத்து வந்ததாக 3 இந்தோனேசிய படகோட்டிகள் மீது  சட்டவிரோத குடியேற்ற குற்றச்சாட்டை வைத்தது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், 3 இந்தோனேசியர்களுக்கும் 12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 

சமீப ஆண்டுகளாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் முயற்சிகள், கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக தோல்வி அடைந்து வருகின்றது. இந்த நிலைமையை மனதில் கொண்டு, பிரான்சின் தீவுப்பகுதிக்கு செல்லும் முயற்சியை இலங்கையர்கள் நம்பியிருக்கலாம் என கருதப்படுகின்றது. அத்துடன், இச்சம்பவம் மீண்டும் இலங்கையிலிருந்து தமிழர்கள் அகதிகளாக வெளியேறத் தொடங்குகிறார்களா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.