சஜித்துக்கு ஆதரவு - அதிகாரபூர்வமாக அறிவித்தது கூட்டமைப்பு!
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
'இலங்கைக்கு சனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2919 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு , இலங்கைத் தமிழரசுக் கட்சி சொல்லப்பட்ட தேர்தல் தொடர்பாக தனது நிலைப்பாட்டைக் குறிப்பிட விரும்புகிறது.
இத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோரும் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர்.
தற்போதுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அபேட்சகர்களுள் முதல் இருவருக்கிடையிலேயே போட்டி பிரதானமாக நிலவுவதாகத் தோன்றுகிறது.
புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி (1) உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச்செல்லக்கூடிய அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானவராகவும், (2) அத்துடன் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க சேவை, பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீதும் சொல்லப்பட்ட சேவைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களின் மீதும் உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும், (3) அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும், (4) நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்டவராகவும், அனைத்துப் பிரசைகளும் தமது விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கும் அதேவேளை, தாம் சமத்துவமானவர்கள் என்றும் நாடு தம் அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போலவே தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்று, சகல பிரஜைகளும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் இருக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேற்போன்றவை உயரிய வேணவாக்களாகும் என்பதோடு, இப்பெரும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது சிறந்தது என்பது பற்றி நன்கு சிந்தித்து சரியான ஒரு கணிப்பினை மேற்கொள்வது வாக்காளரின் கடமையாகும்.
இக்கணிப்பில் விடும் ஒரு தவறு ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும். முதலிரு வேட்பாளர்களும் ஆட்சியில் ஈடுபட்டிருந்துள்ளதோடு, அண்மைக் காலங்களில் ஆட்சியிலிருந்த அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களாவர்.
அவர்களுடைய கடந்தகால செயலாற்றுகை எமக்குத் தெரியும். அதன் அடிப்படையில் பொருத்தமான கணிப்பொன்றை நாம் மேற்கொள்ள முடியும். அவர்களது கொள்கைகளை விளக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களும் எம்மிடம் உள்ளன. அவற்றின் அடிப்படையில், எதேச்சாதிகாரத்தையும் தான்தோன்றித்தனத்தையும் கைவிடுவதாக உறுதியளித்தல் சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாட்டில் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து நாட்டை ஒற்றுமைப்படுத்தல் அடங்கலாக அனைத்துப் பிரசைகள் மத்தியிலும் நீதியையும் சமத்துவத்தையும் ஊக்குவித்தல் உள்ளிட்ட அவர்களது ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதி தொடர்பாக ஒரு கணிப்பை மேற்கொள்ள முடியும்.
பொதுஜன பெரமுன மற்றும் அதன் அபேட்சகர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவர்களோடு ஆட்சியதிகாரத்திலிருந்த ஏனையவர்கள் ஆகியோரின் கடந்த காலச் செயற்பாடுகள் கவலையளிப்பவையாகும். அரசியலமைப்பிற்கான 17வது திருத்தத்தை நீக்கியமை, அரசியலமைப்பிற்கான 18வது திருத்தத்தை நிறைவேற்றியமை, அந்நோக்கத்திற்காக சட்டவாக்கச் சபையை (பாராளுமன்றத்தை) ஆட்டிப்படைத்தமை, அரசியலமைப்புப் பேரவையை இல்லாதொழித்தமை, சேவைத்துறைகள் மற்றும் நீதித் துறை ஆகியவற்றிற்கான அனைத்து உயர் நியமனங்களும் முழுமையாக நிறைவேற்று சனாதிபதியின் விருப்பத்திற்கமைய மேற்கொள்ளப்பட்டமை ஆகியன ஆட்சிமுறையின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக நிறைவேற்று சனாதிபதியான ஒரு தனி மனிதரின் எதேச்சாதிகாரமானதும் தான்தோன்றித்தனமானதுமான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தன. பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை மற்றும் அற்ப குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் இராணுவத் தளபதிக்கெதிராக வழக்குத் தொடுத்தமை ஆகியன அந்த ஆட்சியின் எதேச்சதிகார மற்றும் தான்தோன்றித்தனமான தன்மையை உறுதிப்படுத்தின.
அப்போதைய ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு உதவும் வண்ணம் அரசியலமைப்பு திருத்தியமைக்கப்பட்டது. இது, சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்கான திடசங்கற்பத்தை எடுத்துக் காட்டியது.
இயங்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தைப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையொன்று இல்லாது, அரசியலமைப்பிற்கு முரணான ஓர் அரசாங்கத்தின் வாயிலாக 2018 ஒக்டோபரில் கடத்தியமை பதவி வழங்குவதான வாக்குறுதி, இலஞ்சம் மற்றும் வேறு சலுகைகள் மூலம் தூண்டப்பட்ட கட்சி மாறல் வாயிலாக பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் ஆகியன அதிகாரத்திற்கான அளவற்ற ஆசையை எடுத்துக் காட்டுவனவாக இருந்தன.
எமது உயரிய நீதித்துறைச் சுதந்திரத்தின் காரணமாக நாடு பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - இலங்கைத் தமிழரசுக் கட்சி எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது ஜனநாயகத்திற்காகப் பாராளுமன்றத்தில் உறுதியாக நின்றது.
பத்திரிகையாளர்கள், சிவிலியன் குடிமக்கள், மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் என். ரவிராஜ் ஆகிய எமது இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகளும் காணாமற்போதலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டமையை எடுத்துக் காட்டுகின்றன. வெள்ளை வேன் பீதி நன்கு நினைவிலுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட முழுமையான ஒத்துழைப்பு இருந்தும், ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு, மக்கள் முரண்பாட்டையும் ஒற்றுமையின்மையையும் தவிர்த்து ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டில் வாழ்வதற்கு உதவக்கூடியதாக அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஊக்குவிக்கத் தவறியது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதற்கான தற்போதுள்ள ஏற்பாடுகளை வலுவற்றதாக்குவதற்கும் குறைப்பதற்கும் அரசாங்கம் மேலும் முயற்சித்தது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதை அரசியலமைப்பு ரீதியாக மேம்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலுள்ள பல அமைப்புகளுக்கும் அது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தவறியது.
மற்ற முக்கிய அபேட்சகரான திரு. சஜித் பிரேமதாசவினதும் அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தினதும் செயலாற்றுகை அத்தகைய முறைப்பாட்டிற்கு இடம் வைக்கவில்லை. மாறாக, அவர்கள் அந்நடைமுறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டினுள் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வைக் காணும் விடயம், காணாமற் போன ஆட்களின் விடயம், தடுப்புக் காவலில் உள்ள ஆட்களின் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தல் ஆகியன நிறைவேற்றப்படவேண்டும் புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி இவ்விடயங்களுக்கு அவசரமாக தீர்வு காணவேண்டும். தமிழ் மக்களின் நலன்களுக்காக மாத்திரமின்றி, முழு நாட்டினதும் அனைத்து மக்களினதும் நலனுக்காகவும் இவ்விடயங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டும்.
இவ்விரு வேட்பாளர்களினதும் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய ஒரு பரிசீலனையானது, புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாசவின் வேட்பிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும் என்பதை எடுத்துக்காட்டும்.
பொருளாதார விடயங்கள் தொடர்பாக, இரு வேட்பாளர்களும் மிகவும் விரிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர் எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும். ஊழல் என்பது இரு வேட்பாளர்களது அரசாங்கங்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகும். இலங்கை இருப்பு கொள்ள வேண்டுமாயின், ஊழல் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.
இவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்தில் கொண்டு, குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் விஞ்ஞாபனங ;களின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழத் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) - இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் மக்களை அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் திரு. சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.