கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் செய்யவில்லை! - சம்பிக்க
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமையவே தமிழரசுக்கட்சி அவருக்கு ஆதரவு வழங்குகிறதே தவிர, தமிழரசுக் கட்சியுடனோ தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ எந்த உடன்பாடோ உடன்படிக்கையோ கிடையாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கடந்த 2015 தேர்தலில் முன்வைத்தது போன்று தற்பொழுதும் எமக்கிடையில் ஒப்பந்தம் இருப்பதாக எதிரணி பொய் குற்றச்சாட்டு முன்வைத்து வருவதாகக் கூறிய அவர், அதிகாரப்பகிர்வு, ஜனாதிபதி முறையை ஒழிப்பதா, திருத்தம் செய்வதா? என்பது தொடர்பில் பாராளுமன்றத்தினூடாகவே முடிவு செய்து செயற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. 13 அம்ச கோரிக்கையை ஏற்றதாலே சஜித் பிரேமதாஸிவிற்கு ஆதரவு வழங்க தமிழரசு கட்சி முன்வந்துள்ளதாகப் பொதுஜனபெரமுன தெரிவுக்கும் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
13 அம்ச கோரிக்கை தமிழரசு கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட போதும் எவரும் அதற்கு சார்பாக கருத்து முன்வைக்கவில்லை எனவும் அதனால், அதனை ஒதுக்கி வைத்தே கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கட்சி பேச்சாளர் சுமந்திரன் கூறியிருக்கிறார். எமக்கு த.தே.கூவுடன் எந்த ஒப்பந்தமோ, உடன்பாடோ கிடையாது.
கடந்த தேர்தலிலும் பொய்யான ஒப்பந்தமொன்றை முன்வைத்து சேறு பூச முயன்றார்கள்.இறுதியில் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சிறை செல்ல நேரிட்டது. சஜித் சுதந்திரமான வேட்பாளர். அவரின் விஞ்ஞாபத்தை பார்த்து எவரும் அவரை ஆரிக்கலாம். எமது கட்சி கூட அவருடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. அவரின் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் தான் சகலரும் அவருடன் கைகோர்க்கின்றனர் என்றும் கூறினார்.