SuperTopAds

வட-கிழக்கு அபிவிருத்திக்காக 'சர்வதேச நிதி மாநாடு'!

ஆசிரியர் - Admin
வட-கிழக்கு அபிவிருத்திக்காக 'சர்வதேச நிதி மாநாடு'!

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு தனியான நிதியை வழங்கும் சர்வதேச நாடுகளை அழைத்து, ‘சர்வதேச நிதி’ மாநாட்டை நடத்தி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'நானும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவன். இந்த பிரதேசத்தில் வாழும் மக்களும் யுத்தத்தை நேரடியாக கண்டவர்கள். யுத்தத்தின் மூலம் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டன. அந்த வேதனைகளை நான் அறிவேன்.

எனது ஆட்சிக் காலத்தில் இங்குள்ள இளைஞர், யுவதிகளின் தொழிற்பிரச்சினை தீர்க்கப்படும். இதற்காக பிரதேச செயலகங்கள் தோறும் கைத்தொழில் பேட்டைகள் நிறுவப்படும்.அதே போன்று பிரதேச செயலகங்களை மையப்படுத்தி டிஜிட்டல் தொழில் நுட்ப மேம்பாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளேன்.

நவீன தொழல் நுட்பங்களை கிராமங்களுக்கு கொண்டுவருவதன் மூலம் இங்குள்ள வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதனை சரவதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல முடியும்.இதன் மூலம் பிரதேச இளைஞர்கள் பெரிதும் நன்மையடைவர். யுத்தம் நிறைவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகின்றன. இன்னும் மக்கள் தமது அபிவிருத்தியை உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

யுத்தம் இடம் பெற்றதன் பின்னர் பல நாடுகள் குறிப்பாக ருவான்டா,புருண்டி போன்ற நாடுகள் கூட தமது நாட்டை அபிவிருத்தி செய்து கொள்ள சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுள்ளன.

இந்த அபிவிருத்திகளை மேற்பார்வை செய்ய ஜனாதிபதி செயலணி ஒன்றை ஏற்படுத்தவுள்ளேன். இதன் மூலம் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கும். என்றார்.