கோத்தபாய ஜனாதிபதியானால் கட்சி நடத்த முடியாது: -சிறிதரன் எம்.பி கவலை.
தற்பொழுது ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் சார்ந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவருகின்றனர் அந்தவகையில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறைமுகமாக சஜித்தை ஆதரித்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது என்பது யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அவர்கள் கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் 30.10.2019 தமிழரசுக்கட்சியின் முகநூல் போரளிகளுடனான இரகசிய கலந்துரையாடல் ஒன்றை அவசரமாக நடத்தியுள்ளார்.
இக் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் கோத்தாபய ஜனாதிபதியாக வந்தால் அடுத்த கட்டமாக மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி அமைய வாய்ப்புகள் உள்ளது எனவும் இவ்வாறு ஆட்சி அதிகாரத்தை மகிந்த தரப்பு கைப்பற்றினால் வடக்கில் டக்ளஸ் தேவானந்தவின் கை ஓங்கும் எனவும் அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டு வடக்கில் பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடும் இதனால் வறுமையிலும், வேலை வாய்ப்புகள் இன்றி இருக்கும் மக்கள் டக்ளஸ் பக்கம் திரும்பிவிடுவார்கள்
இதனால் நாம் கட்சி நடத்த முடியாத நிலை ஏற்படுவதோடு கூட்டமைப்பு எம்.பிமார் வீடுகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் என சிறிதரன் அவர்கள் தனது மனதிலிருந்த ஆதங்கத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறன நிலை எமக்கும் எமது கட்சிக்கும் ஏற்படாமல் இருக்க கோத்தாபாய ராஜபக்ஸவுக்கு எதிராகவும் சஜித்திற்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யுமாறு சிறிதரன் அவர்கள் கூட்டத்தில் இருந்த தமிழரசுக்கட்சியின் முகநூல் வல்லுனர்களை கேட்டுக்கொண்டார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் இவ் நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் 60 வீதமாக பிரச்சினைகள் தீர்கப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவோடு அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் ஆனந்த சுதாகரன் போன்ற அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு சிறு துரும்பை கூட இவர்களால் நகர்த்த முடியவில்லை என்பதுடன் தமிழர்களின் கலாச்சார சின்னங்கள் சமயஸ்தலங்கள் போன்றன திட்டமிட்டு அழிக்கப்பட்டிருப்பதோடு இந்துக்களின் கோவில்கள் சுடுகாட்டுக்கு சமம் என்று இவ் நல்லாட்சி அரசால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் தங்கள் சுயலாப அரசியலுக்காகவும் தமிழ் மக்களை பகடைகாயாக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டவேண்டியது காலத்தின் தேவையாகும்.