எனது தந்தையை கோத்தபாய ராஜபக்சவின் ஆள்களே கடத்தினார்கள்

ஆசிரியர் - Admin
எனது தந்தையை கோத்தபாய ராஜபக்சவின் ஆள்களே கடத்தினார்கள்

பிரபல பொருளியல் ஆசிரியர் அமரர் வரதராஜன் கடத்தப்பட்டமைக்கு ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபாய ராஜபக்சவே காரணமாக இருந்தார் என வரதராஜனின் மகனும் யாழ். மாநகர சபை உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான வரதராஜா பார்த்தீபன் தெரிவித்தார். 

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துக்கூறுகையில், 

கோத்தபாய ராஜபக்ச அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துக்கூறும்போது, தாமே எதிர்கால ஜனாதிபதி எனவும் கடந்த காலங்களில் நடந்தவைகளை நினைத்து குழம்பிக்கொண்டிருக்காமல் எதிர்காலம் தொடர்பாக சிந்தியுங்கள் எனத் தெரிவித்திருந்தார் 

ஆனால் காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு எதிர்காலம் என்பது அவர்களின் பிள்ளைகளும் உறவுகளுமே ஆவர். அவர்களை மீளக் கண்டுபிடிப்பதே தமது எதிர்காலம் என நினைத்து போராடி வருகின்றனர். இவ்வாறான நிலையில், கோத்தபாயவின் கருத்துக்கள் கண்டனத்துக்கு உரியவை. 

காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனை எவ்வாறு இருக்கும் என்று அனுபவித்தவன்  தற்போதும் அனுபவித்து வருகின்றேன் என்ற ரீதியில் சில விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி எனது தந்தை கொழும்பு வெள்ளைவத்தை தமிழ்ச் சங்கத்துக்கு அண்மையில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டிருந்தார். அவர் கடத்தப்பட்டு ஒரு மணி நேரத்தில் எனது அம்மாவும், மாமாவும் வெள்ளவத்தை 42 ஆவது ஒழுங்கையில் வைத்து மர்ம நபர்களினால் கடத்தப்பட்டனர். ஒரே நாளில் அடுத்தடுத்து எனது குடும்பத்தார் கடத்தப்பட்ட்னர். பின்னர் கடத்தல்காரர்கள் என்னுடைய அம்மாவினை மட்டும் பொரளையில் இறக்கிவிட்டு சென்றனர்.

அப்பாவும், மாமாவும் விடுவிக்கப்படாமல் காணாமல் போயிருந்தனர். பின்னர் நாம் பொலிஸ் நிலையம், சர்வதேச தொண்டு நிறுவனங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், எனது  தந்தையை, அவர் கடத்தப்பட்டு 33 நாட்களின் பின்னர் கொழும்பு தெஹிவளை பகுதியில் கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் வேன் ஒன்றில் கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றனர். ஆனால், மாமா இன்றுவரை வரவில்லை.

33 நாட்களின் பின்னர் வந்த எனது தந்தை, தன்னைக் கடத்தியவர்கள் கோத்தாபயவின் ஆட்கள்தான் என என்னிடம் கூறினார். அரசியலில் ஈடுபடக் கூடாது, கற்பித்தலை மட்டும் செய்ய வேண்டும் என எச்சரிக்கை செய்யப்பட்டே தன்னை விடுவித்தார்கள் எனவும் அவர் கூறினார். 

ஆக, எனது தந்தையின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது கடத்தலின் பின்னணியில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவே இருப்பார் என பலமான சந்தேகம் உள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றமையால் இதற்கு அவர்களே பொறுப்புக்கூறவேண்டும். – எனத் தெரிவித்தார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு