SuperTopAds

தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை - விரைவில் விசாரணை!

ஆசிரியர் - Admin
தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை - விரைவில் விசாரணை!

வடக்கு, கிழக்கில் தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஊடகவியலாளர்களின் படுகொலை சம்பவங்களுடன் ஆரம்பிக்கும் விசாரணை படிப்படியாக ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் காட்டப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு என ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரதமர், முதலில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தக் கொலை தொடர்பில் நடந்த விசாரணைகளில் ஏற்பட்ட திருப்பத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்துவோம்.

இந்த ஆட்சியின் போது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஆட்பலம் குறைவாக இருந்தது. ஒவ்வொரு சம்பவமாகத்தான் விசாரணைகளை நடத்த வேண்டும். முழு காவல்துறையையும் இந்த விசாரணைகளுக்காக ஈடுபடுத்த முடியாதுள்ளது என்றார்.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர், குறிப்பாக கடத்தப்பட்டு உயிரிருடன் மீண்ட, உயிருள்ள சாட்சியாக தமிழ் ஊடகவியலாளர்கள் இருக்கும் போதிலும், அரசியல் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரணை நடத்த முடியாமல் உள்ளதற்கு என்ன காரணம்?

இதற்குப் பதிலளித்த பிரதமர், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவோம். முதலில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளை ஆரம்பிப்போம் என்றார்.