யாழ். விமான நிலைய பெயர்ப்பலகை- இனவாதம் கிளப்பும் சிங்கள ஊடகங்கள்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழ்மொழிக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளதை மையப்படுத்தி இனவாதத்தைத் தூண்டும் வகையில் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியதாகும். எனினும் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ இதனைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட வெளியிடாதது ஏன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பலாலியில் நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்ட நிலையில் விமான நிலையத்தின் பெயர் அதன் பெயர்ப்பலகையில் முதலில் தமிழ் மொழியிலும், இரண்டாவதாக சிங்கள மொழியிலும், மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் பெயரிடப்பட்டிருந்தது. அதனை சுட்டிக்காட்டி சில சிங்கள ஊடகங்கள் 'சிங்கள மொழி இரண்டாம்பட்சமாக்கப்பட்டு விட்டது' என்ற கோணத்தில் செய்தி வெளியிட்டிருந்தன.
தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடமாகாணத்தில் பொதுசேவையை வழங்கும் யாழ்ப்பாண நீதிமன்றம், யாழ் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போன்றவற்றின் பெயர்ப்பலகைகளிலும் முதலாவதாக தமிழ்மொழியிலேயே பெயரிடப்பட்டிருப்பதை தமது சமூகவலைத் தளப் பக்கங்களில் சுட்டிக்காட்டிய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும், இனவாதத்தைத் தூண்டும்விதமாக செய்தி வெளியிட்டிருந்த சிங்கள ஊடகங்களைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.