மாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு!

ஆசிரியர் - Admin
மாரப்பனவுடன் ஐ.நா அறிக்கையாளர் சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள மத நம்பிக்கை சுதந்திரத்திற்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா அறிக்கையாளருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் வெளிப்படையான தொடர்புகளைப் பேணுதல் மற்றும் பேச்சுவார்த்தைகளைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட அரசாங்கத்தின் கொள்கை குறித்து ஐ.நா அறிக்கையாளரிடம் திலக் மாரப்பன எடுத்துரைத்தார்.

அத்தோடு ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்களுடன் தொடர்பினைப் பேணுவது அரசாங்கம் விரும்புவதுடன், அறிக்கையாளர்களின் பின்னூட்டங்களை நேர்மறையான கோணத்திலேயே பார்ப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இவ்விஜயத்தின் போது விசேட அறிக்கையாளருக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

இதன்போது தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்த அஹ்மட் ஷஹீட், குறிப்பாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் கடினமான சூழ்நிலைகளை இலங்கை எதிர்கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டார். அதேவேளை பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அகதிகளானோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

மேலும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான அரச அதிகாரிகள் குழுவுடனும் ஷஹீட் சந்திப்பொன்றை நடத்தினார். இச்சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சு, பொலிஸ், சட்டமாதிபர் திணைக்களம், புத்தசாசன அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் 26 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் அஹ்மட் ஷஹீட் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் பல்வேறு பிரதேசங்களுக்குச் செல்வதற்கும் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Radio
×