கிளிநொச்சி பகுதியில் தாழிறங்கியுள்ள பாலம்!

தருமபுரத்தில் இருந்து கட்டைக்காடு செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலம் உடைந்த நிலையில் தாழிறங்கிக் காணப்படுகின்றது.பாலம் இவ்வாறு தாழிறங்கியுள்ளதால் வாகனங்கள் அச்சத்துடனேயே பயணம் செய்து வருகின்றன.
இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாலம் அமைந்திருக்கின்றது. இந்தப்பாலமானது மீள்குடிய மர்வுக்குப் பின்னர் நிர்மாணிக்கப்பட்டது.
புதிதாகச் சீரமைக்கப்பட்ட பாலம் இவ்வாறு சேதமடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சீரமைப்பு வேலைகளில் இருக்கும் குறைபாடுகளே இதற்கு காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
நாளாந்தம் அதிகளவான மக்கள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இரு ஓரங்களும் தாழிறங்கிய நிலையில் காணப்படுகின்றன.
இந்தச் சாலை தருமபுரத்தில் இருந்து வட்டக்கச்சி, இராமநாதபரம் செல்லும் முதன்மைப் பாதையாகவும் காணப்படுகின்றது. எனவே உரியவர்கள் இதனை கவனத்தில் எடுத்து பாலத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த சாலையானது பிரதேச சபைக்குரியது என்பதனால் இது தொடர்பாக கரைச்சிப் பிரதேச சபைச் செயலாளர் கம்சநாதனிடம் கேட்டபோது: அது 1000 பாலங்கள் திட்டத்தின் கீழ் சீரமைப்புச் செய்யப்பட்டது என்றும், அதனைத் தமது பிரிவு மேற்கொள்ள வில்லை என்றும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையைத் தொடர்பு கொண்டபோதும் அது பயனளிக்கவில்லை.