தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது?
தமிழர்களுக்கான அரசியல் தீர்வையும் அதிகாரப் பகிர்வையும் எட்டாத தூரத்துக்கு தூக்கியெறிந்து விட்டது போல் அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத சம்பவம், எதிரணியைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பிரதமராக்கிய ஜனநாயக சீர்கேடு, இரு தேசியக் கட்சிகள் ஒன்று இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம் உருக்குலைந்து போனமை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான தொடர்ச்சியான முரண்பாடுகள், முஸ்லிம் அமைச்சர்கள் ஒருசேர பதவி விலகியமை போன்ற பல்வேறு அசாதாரண சம்பவங்கள் குறித்த சில காலங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டன.
இச்சம்பவங்களின் கூட்டுமொத்த விளைவுகள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வையும் அதிகாரப் பகிர்வு முன்னெடுப்புக்களையும் தூக்கியெறிந்து விட்டதாகவே கருதும் அளவுக்கு இலங்கையின் அரசியல் நிலைமைகள் குழம்பிப்போய் காணப்படுகின்றன. .
சிறுபான்மை மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க காலத்துக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்று விடமுடியுமென்ற நம்பிக்கையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நம்பிக்கையுடன் பறைச்சாற்றியிருந்தது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் 2016 ஆம் ஆண்டுக்குள் அரசியல் தீர்வு என்ற நம்பிக்கை வெளியிடப் பட்டிருந்தது. ஆனால் இன்றைய நிலையில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக தமிழ் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வாய்ப்புக்கள் அனைத்துமே தட்டிப் பறிக்கப்படுகின்றன என கூட்டமைப்பினர் அதிருப்தி தெரிவிக் கின்றனர். .
2015, ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலின் போது நம்பிக்கை கொண்டிருந்த தமிழ்மக்கள் தற்போது வரவிருக்கிற ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது கூட்டமைப்பு எதைக் கூறி மக்களிடம் வாக்கு கேட்கப்போகிறது என்பது பற்றியெல்லாம் அங்கும் இங்கும் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள்; குழம்பிப் போயிருக்கிறார்கள்.
அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு விடயங்களில் அரசாங்கம் தீவிர முற்போக்கு சிந்தனை கொண்டதாக செயற்பட்டு வருகிறது என்ற நிலைப்பாடு கருகிப்போய், தற்பொழுது பாராளுமன்ற தேர்தலையா அல்லது ஜனாதிபதி தேர்தலையா முன் நடத்துவது? பாராளுமன்ற தேர்தல் வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்காக, மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை ஜே.வி. பி. கட்சியினர் முன் வைத்திருக்கும் நிலையில் இப்பிரேரணை அடுத்தமாதம் 9, 10 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது பாராளுமன்றில் வாக்கெடுப்பு நிலையொன்று வருமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய முடிவை எடுக்கும் என்பது தொடர்பிலும் அறிவதற்கு, வட கிழக்கு மக்கள் ஆர்வமாகவுள்ளார்கள் என்பதும் ஒரு பொதுவான எதிர்பார்ப்பு. காரணம் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு என்ற விவகாரங்கள் மாலை நேர அஸ்தமிப்புக்குள் போய்விட்ட நிலையில் கூட்டமைப்பு என்ன முடிவை நோக்கி நகரமுடியும் என்பதே இன்றைய எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும்.
ஏலவே அரசியல் தீர்வு கிடைக்கும் சாத்திய நிலை ஏற்படுமா இல்லையா என்ற சந்தேகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட போதும் கூட்டமைப்புக்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் இடையில் காணப்பட்ட புரிந்துணர்வு இணக்கப்பாடு காரணமாக அரசியல் தீர்வு கொண்டுவரப்படலாமென்ற நம்பிக்கை, சிறியளவு நம்பிக்கையாவது இருந்தது என்பது உண்மையே. அதுவுமின்றி உபகுழுக்கள் கூடி ஆராய்ந்தமை வழிப்படுத்தல் குழு நியமிக்கப்பட்டமை அதற்கு பிரதமர் ரணில விக்ரமசிங்க தலைமை வகித்தமை போன்ற சாதகமான காரணங்களினால் அரசியல் தீர்வு பற்றிய நம்பிக்கைகள் இருப்பதற்கு நியாயம் இருந்தது. இவற்றுடன் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலிருந்த நல்லிணக்க போக்கு நம்பிக்கைக்குரிய வலுவை ஊட்டி நின்றது.
ஆனால் நடந்ததென்ன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிறக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரம்பரியங்களை உடைத்து, பிரதமராக நியமிக்கப்பட்டமை, நெருக்கடி நிலையை மேலும் சிக்கலாக்கும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை. பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் அதன் காரணமாக எழுந்த வாக்கெடுப்பு நிலைமைகள் என எல்லா நெருக்கடிகளும் அரசியல் தீர்வு என்ற விடயத்தை கண்ணுக்கு தெரியாத தூரத்துக்கு தூக்கி எறிந்து விட்டதென்றே கருதும் அளவுக்கு நிலைமை மாறிப்போய்விட்டது.
பாராளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்ட போதும், நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும் கூட்டமைப்பினரின் நிலைப்பாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களையும் அவர் விருப்பம் கொண்ட அரசாங்கத்தையும் நேரடியாகவே பாதித்திருந்தது. கூட்டமைப்பு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு நல்க வேண்டும் அல்லது நடுநிலை வகிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஜனாதிபதி கூட்டமைப்பிடம் நேரடியாகவே கோரிக்கையாக விடுத்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி தொடுக்கப்பட்ட வழக்கை முன் நின்று நடத்தியவர்களாக கூட்டமைப்பினர் காணப்பட்ட நிலையில் ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் காணப்பட்ட நல்லிணக்கத்துக்கும் குந்தகம் ஏற்படத் தொடங்கியமை சாதகமான எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் ஆப்பு வைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
அரசியல் தீர்வை முன்கொண்டு செல்லும் அனைத்து சந்தர்ப்பங்களும் கைநழுவிப் போய்விட்டதாகவே, தமிழ் மக்கள் மற்றும் புத்திஜீவிகளுடைய கருத்தாகக் காணப்படுகிறது. இதற்கு காரணமாக இருப்பவை மேலே எடுத்துக் கூறப்பட்ட காரணங்களே.
அண்மையில் வெளிநாடொன்றில் வைத்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் அதிகார பகிர்வு விடயத்தில் 13 க்கப்பால் செல்லப் போவதில்லையென அடித்து கூறியிருந்தார். அரசியல் சாசனமொன்றின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு நாட்டிலுள்ள அனைத்து மக்களுடைய அங்கீகாரமும் பெறப்பட வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் 2015, ஆம் ஆண்டு முதல் கூறிவந்துள்ளார். அதுவுமின்றி 13 ஆம், திருத்தம் போதுமானது என்ற கருத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பினர் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது ஜனாதிபதியின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்ல முடியாது என்ற வாதத்தை எந்தளவுக்கு தமிழ்த் தரப்பினர் ஏற்றுக்கொள்ள போகிறார்கள். தற்பொழுது தேர்தல் வரப்போகின்றது என்ற மாயையில் இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இக்கட்சிகள் எதுவுமே நீண்டநாளாகப் பேசப்பட்டு வந்த அரசியல் தீர்வு பற்றியோ புதிய அரசியல் சாசனம் பற்றியோ பேசுவதாகத் தெரியவில்லை. அனைவரும் இந்த விவகாரம் தொடர்பில் மறந்துபோய்விட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மூச்சுவிடாமலே அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார். அவரது கனவெல்லாம் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் பற்றியதாகவே இருக்கின்றது.
இவ்வாறான தளம்பல் நிலையில் அரசியல் தீர்வு பற்றி மூச்சு விடும் திராணி கொண்டவர்களாக எவருமில்லையென்பது யதார்த்தமாகவே தெரிகின்றது. .
நல்லாட்சி அரசாங்கம் குலைந்து போய் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாகி பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவு நல்கும் பின்புலத்தாராக கூட்டமைப்பினர் இருந்த போதும் சாண் ஏற முழும் சறுக்குவது போல் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம் நாட்டின் அனைத்து நிலைமைகளையும் நிலைகுலைய வைத்துவிட்டது. இச்சம்பவம் பெரும்பான்மை சமூகத்துக்கு அதிர்ச்சியை அளித்ததோ என்னவோ ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் பேரதிர்ச்சியை உண்டாக்கியதுடன் தமிழ்த் தலைவர்களின் இலக்கையும் நோக்கையும் ஸ்தம்பிதம் அடைய வைத்துள்ளது.
அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி தரப்பினருக்கு இச்சம்பவம் தமிழர்களின் போராட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பை அல்லது ஆறுதலை தந்துள்ளது என்றும் கருதவும் இடமுண்டு.
உள்நாட்டு அரசியல் தலைமைகள் மீது நம்பிக்கை இழக்கப்படும் போது சர்வதேசத்தின் உதவியை நாடுவது பொதுவாகவே தமிழ்த் தலைமைகளின் கடந்தகால போக்குகளாக அல்லது அவர்கள் நாடும் யுக்திகளாக இருந்து வந்துள்ளமை பொதுவான உண்மை. எனினும் 2015 ஆம் ஆண்டுக்குப் பின் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எட்டநின்று ஆதரவு நல்கும் ஒரு புறநிலை கட்சியாகவே சர்வதேசத்துக்கு அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கும் நிலையில், எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்நிறுத்தி சர்வதேசத்துக்கு முறையிட முடியும்?
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த கூட்டமைப்பினர், அரசியல் தீர்வு விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் இழுத்தடிப்பு நிலைமையை விளக்க முற்பட்டார்கள். அதற்கு இந்தியப்பிரதமர், ”இது விடயம் தொடர்பில் யான் ஏற்கனவே தங்களிடம் கேட்டறிந்துள்ளேன்” என எடுத்த எடுப்பில் கூறியுள்ளார்.
இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் விவகாரத்தில் அவர் காட்டிய அக்கறையை விட, இலங்கை அரசாங்கம் பிராந்திய ஒற்றுமை, பிராந்தியக் கொள்கை என்பவற்றிலேயே அதிக அக்கறை காட்டி வந்தவராக தனது ஆட்சிக்காலம் முழுவதும் இருந்து வந்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மிக நேர்த்தியாகவும் சாணக்கியத்துடனும் பின்பற்றியவர் இவர் என்பது ராஜதந்திர வட்டாரங்களால் பேசப்படுகிற விடயம். தனது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர் அக்கறை காட்டியதாக கூறப்படவில்லை.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் நரேந்திர மோடியை மூன்று தடவைகளுக்கு மேல் சந்தித்து உரையாடியிருந்த போதும் தமிழர் விவகாரத்தில் கரிசனை காட்டிய நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்படவில்லை. கூட்டமைப்பு மிக விரைவில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அச்சந்திப்பின் போது எத்தகைய விவகாரங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. நிகழ்ச்சி நிரல் எதுவாக இருக்கும் என்பது மூடுமந்திரமாக இருந்தாலும் ஊகத்தின் அடிப்படையில் கூறுவதாக இருந்தால் இடையில் ஓய்ந்து போய் விட்டதாக விமர்சிக்கப்படும் அரசியல் சாசன முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்துக்கு வலுவூட்டப்படும் என்று எண்ண இடமுண்டு.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர் விவகாரம் அரசியல் தீர்வு போராட்டங்கள் அவர் அறியாத ஒரு விடயமல்ல. அதுவுமன்றி புதிதாக விளங்க வைக்க வேண்டியதுமில்லை. நிலைமையை நன்கறிந்தவர் அவர். கூட்டமைப்பின் குழுவினர் சந்திக்கவிருக்கும் சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பதிலேயே சகல சாணக்கியமும் அடங்கியிருக்கிறது.
இந்தியாவின் இன்றைய ஆட்சி நிலைமையைப் பொறுத்தவரை மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி ஒருமித்த ஜனநாயக பலம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. தொங்குநிலை இல்லாத தனிப்பலம் நிறுவப்பட்டிருக்கும் நிலைமையில் பிராந்திய சார்பான கொள்கைகளில் அதியுயர் ராஜதந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை உள்ளது என்றே இந்திய அரசியல் ராஜதந்திரிகளால் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கும் சவாலாக மாறியிருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதமொன்று இலங்கைக்குள் நுழைந்திருப்பது தொடர்பில் தீவிரமான பரிசோதனைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சாத்தியமான சூழல் போக்கை கூட்டமைப்பு வெற்றிகரமாக, பயன்படுத்த வேண்டுமென்பதே அனைவரது எதிர்பார்ப்பும்.இப்பொழுதெல்லாம் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு என்ற மூலமந்திரத்தை மறந்து போய் அபிவிருத்தியென்ற மாயையில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்றே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.சமஷ்டி கேட்ட கூட்டமைப்பினர் சமுர்த்திக்காக, கையேந்தி நிற்கிறார்கள் என்ற தகுதியற்ற வார்த்தைகளைக் கொட்டி சிலரால் விமர்சிக்கப்படுகிறது.
கம்பெரலிய திட்டம், செமட செவன வீட்டுத்திட்டம், சமுர்த்தி திட்டம், வீதி அபிவிருத்தி என்ற அற்பத்தனமான சலுகைகளுக்காக ஓடித் திரிகிறார்கள் என்ற நாகரிகமற்ற பிரச்சாரங்கள் எழுப்பப்படுகின்றன. இது மனம் ஆற்றா மையால் எழுந்தது. இருந்தபோதிலும் மிக கவனமாகவும் நிதானமாகவும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறையவே உள என்பது ஆழமாக அறிந்து பயணிக்க வேண்டிய தேவை கூட்டமைப்பினருக்குண்டு.
விரும்பியோ விரும்பாமலோ இரு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய தேவை, நாட்டிலுள்ள பிரதான கட்சிகளுக்கு மாத்திரமல்ல கூட்டமைப்புக்கும் உள்ளது, ஜனாதிபதி தேர்தல் முன் நடத்தப்படுமாயின் கூட்டமைப்பின் நிலைப்பாடு எப்படியிருக்கப் போகிறது, மாறாக பொதுத் தேர்தல் முன்னே நடத்தப்படுமாயின் கூட்டமைப்பு மக்கள் முன்கொண்டு செல்லப் போகின்ற அடைவு நிலையென்ன என்பது பற்றி தமிழ்மக்கள் காத்திரமான எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். .
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூட்டமைப்பு கைகாட்டிய திசையை நோக்கி அணிவகுத்துச் செல்ல தமிழ் மக்கள் ஒன்றுசேர தயாராக இருந்தார்கள். காரணம் ஜார் மன்னனைப் போன்ற ஒரு கொடுங்கோண்மை ஆட்சியாளனை வீழ்த்திவிட வேண்டுமென்ற வெறி இருந்தது. ஆனால் அந்த சூழ்நிலையோ நெருக்கடியோ வரப்போகும் ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்படுமென்று கட்டியம் கூறிவிட முடியாது. உண்மையை உரைப்பதாயின் தமிழ் மக்களுக்கான நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணுவேன் என்று வாக்குறுதியளிக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் எதிர்கால தேர்தலில் களம் இறங்குவாரென்று கூற முடியாது. அதுவுமன்றி வேட்பாளராக களமிறங்கவிருக்கும் பட்டியலைப் பார்ப்பின் அத்தகைய அநாதரட்ஷகர் ஒருவர் களம் இறங்கவிருப்பதாக கற்பனைகூட, பண்ணிப்பார்க்க முடியவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்கள் யார் கைகாட்டலுக்கும் திசை திரும்பப் போவதில்லையென்ற நிலையே தோன்ற இடமுண்டு.
இன்னுமொரு வகையில் பார்ப்பின் பொதுத் தேர்தல் முந்துமாயின் கூட்டமைப்பு முன்வைக்கவிருக்கும் கோரிக்கைகளும் கொள்கைகளும் என்னவாக இருக்கும்? இது பற்றி அறிவதில் பொது மக்கள் உள்ளடங்கலாக புத்திஜீவிகள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது அங்கு இங்கு இருந்துவரும் கருத்தாடல்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது.
இருத்தாலுங்கூட, கூட்டமைப்பின் வார்த்தைகளை மீறி, மாற்றுத் தலைமைகளை நம்பவோ அல்லது, எதிரணிக்கட்சிகளை நாடவோ தமிழ் மக்கள் தயாராகப் போவதில்லையென்ற பலமான யதார்த்தத்தையும் நாம் நம்பாமல் இருக்கமுடியாது. எனினும், கூட்டமைப்பு தன்னை சுயமதிப்பீடு செய்து சுதாகரித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
எது எப்படியாயினும், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் கூறியது போல் நாட்டின் அனைத்து அசாதாரண சூழ்நிலைகளும் நேரடியாக தமிழ் மக்களையே பாதித்திருக்கிறது, அது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் நோக்கம் ஜனாதிபதியிடமில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தின் உருக்குலைவுகள், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான தொடர்நிலை முரண்பாடுகள் அதனைத் தொடர்ந்து நாட்டை உலுக்கிப் போட்ட, பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்தமை என்பன ஒருபுறமிருக்க, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வுக்கான போரை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய வியூகங்களையும் ராஜதந்திர முன்னிலைகளையும் மிக சாதூரியமாகவும் சாணக்கியமாகவும் கொண்டு செல்ல வேண்டிய காலக்கட்டத்தில் நிக்கிறது என்பது தெளிவாகிறது.
எது, எவ்வாறாயினும், அண்மைக்கால அரசியல் ஈடாட்டங்கள் முரண்பாடுகள் குலைவுகள் தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தை கண்ணுக்கு எட்டாத தூரத்தில் தூக்கி எறிந்துவிட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய யதார்த்தம். அதுவுமின்றி நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய அசாதாரண சூழ்நிலையைத் தடுக்கும் சாதகமாகக் கொண்டு இலங்கை ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் தட்டிக் கழிக்கப் பார்க்கும் அரசியல் தீர்வு விவகாரத்தை கூட்டமைப்பு மிக சாதூரியமாக முன்னெடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயம் என்பதே தெளிவு.
திருமலை நவம்