கல்முனை விவகாரம், கவனவீர்ப்புக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு

ஆசிரியர் - Admin
கல்முனை விவகாரம், கவனவீர்ப்புக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வலியுறுத்தி நாளை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனவீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு வலியுறுத்தி மதகுருமார்களும் அப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அப் போராட்டத்தற்கு வலு சேர்க்கும் முகமாக அகில இலங்கை சைவ மகா சபை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று அழைப்பு விடுத்துள்ளது

கல்முனையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தலமையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொண்டுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் நடைபெறுக்கின்ற இப் போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

1993 ஆம் ஆண்டு இப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிந்த போதும் மக்களும் இச் செயலகத்தின் தரமுயர்வு பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் கடந்த 30 வருடகாலமாக அது திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. 

அத்துடன் அங்கு போராடுகின்ற மக்கள் தங்களுடைய தேசத்தில் தங்களுடைய உரிமைகளைதான் கேட்கின்றார்கள். வேறு யாருடைய உரிமைகளையும் அவர்கள் தட்டிப் பறிக்கவில்லை. வேறு யாருடைய உரிமைகளையும் கேட்கவும் இல்லை. 

அவ் மக்களுடைய அடிப்படைய உரிமைகள் கூட தொடந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில் தான் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அதுவும் நீதியான முறையில் காலத்தின் தேவையறிந்து முன்னெடுக்கப்படுகின்ற இப் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தொன்றாகும்.

பல ஆண்டுகாலமாக கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு பல இன விகிதாரசாரத்தை மாற்றியமைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்த வகையில் அதனை மேலும் தொடராமல் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது

கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு வலியுறுத்தி தங்களது உரிமைக்காக போராடிக் கொண்டு இருக்கும் மக்கள் போராட்டத்திற்கு எதிராக அந்த மக்களுக்கு அவர்கள் வேண்டுகின்ற உரிமைகளை வழங்ககூடாது என்றும் சில அடிப்படைவாதிகளினால் ஒரு போராட்டம் சம நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

தொடர்ந்தும் சிங்கள அரசுகளின் எடுபிடிகளாக இருந்து கொண்டு அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு வலுசேர்க்கவே சில அடிப்படைவாதிகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்த கூடாது போராட்டம் நடாத்தி வருகின்றனர். இது ஒரு வேதனைக்குரிய விடயம் மட்டுமல்ல கண்டனத்துகுரியதும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு வலியுறுத்தும் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நாளை (23.06.2019) மதியம் 2 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து எமது உறவுகள் கல்முனையில் நாடாத்துகின்ற உரிமைப் போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு