அவா்களை விடுதலை செய்யுங்கள்..! பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள அதிரடி உத்தரவு..
உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னா் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிறு குற்றங்கள் செய்தவா்களை துாித விசாரணைகளின் பின்னா் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
தேசிய பாதுகாப்பு சபை நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியபோதே அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலமைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன்,
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன. சமய நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் சந்திப்புகள் நடைபெறும் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக
முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்கட்சி ஆகியவற்றின் மக்கள் பிரதிநிதிகளும்
பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி, முப்படை தளபதிகள், புலனாய்வுத் துறை பிரதானிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்
என்றுள்ளது. இதேவேளை, ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து நாடுமுழுவதும் 2 ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் 200இற்கும் மேற்பட்டோர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.