SuperTopAds

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக ரணில் மீண்டும் வாக்குறுதி!

ஆசிரியர் - Admin
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக ரணில் மீண்டும் வாக்குறுதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிறிநேசன் ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் சந்தித்து, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி, கல்முனையில் மூன்றாவது நாளாக நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார். இது தொடர்பான வாக்குறுதிகள் பலமுறை ரணிலால் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் ஞா.சிறிநேசன் ஆகிய இருவரிடமும் ரணில் இந்த வாக்குறுதியை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் செவ்வாய்க்கிழமையோ, அல்லது அதற்கடுத்து வரும் செவ்வாய்க்கிழமையோ அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களிற்கு முன்னர் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க பிரதமர் தயாரானபோது, முஸ்லிம் காங்கிரஸ் அதை எதிர்த்தது. இந்நிலையில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இல்லாத நிலையில், அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார்.