ஓடவும் மாட்டோம்.. ஒழியவும் மாட்டோம்..! சுமந்திரன் ஆவேசம்.
பலத்த சவாலை நாங்கள் எதிா்கொண்டிருக்கிறோம். இவ்வாறான சவாலை நாம் முன்னா் எதிா்கொண்டது கிடையாது. இவ்வாறான ஒரு நிலையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓட முடியாது.
நாங்கள் இந்த சவால்களுக்கு நிச்சயமாக முகம் கொடுப்போம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிச்சயமாக வென்றெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினா் சுமந்திரன் கூறியுள்ளாா்.
ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்திய வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுக்கழக மைதானத்தில்
கழகத்தின் தலைவர் சே.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் மக்களின் அரசியல் பயணத்திலே பல வித்தியாசமான தசாப்தங்களைக்
கடந்து வந்திருக்கின்றோம். ஆனால், இன்று நாங்கள் இருக்கின்ற சூழல் இதற்கு முன்னெப்போதும் இல்லாத சூழலாக இருக்கின்றது. எங்களுக்கு உகந்த ஒரு சூழலை நாம் உருவாக்கி விட்டோம்
என்று நினைத்திருந்தபோது அந்தச் சூழலே எங்களுக்கு மாறானதாகவும், நாங்கள் சறுக்கி விழக்கூடியதாகவும், விழுந்தால் பாரிய காயம் ஏற்படக்கூடியதாகவும்
இன்று எங்கள் முன்னால் இருந்து கொண்டிருக்கின்றது. மிக நிதானமாக, மிக கவனமாக நாங்கள் எங்களது மக்களது நலன்களை முன்னிறுத்தி முன்னேற வேண்டிய காலமாக இருக்கின்றது.
விசேடமாக இந்த வருடத்தில் இவை எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய வேண்டும். எமது நீண்டகால இலக்குகளை அடைவதற்கான வழிகள் என்ன? பொதுமக்களினது நலன்களை அடைவதில்
அவர்களுக்கு எப்படித் தலைமைத்துவம் கொடுக்க முடியும்? என்பது குறித்து சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலமாக இது இருக்கின்றது.
இது இலகுவான ஒரு சவால் அல்ல. முன்னெப்போதும் இல்லாத பலத்த சவால். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக முகம் கொடுக்க வேண்டிய
ஒரு சவாலாக இது இருக்கின்றது. எனவே, இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம்.
வாழ்க்கையில் தோல்வியைச் சந்திப்பது எப்படி, தோல்வியைக் கையாள்வது எப்படி, ஏமாற்றங்களுக்கு முகம் கொடுப்பது எப்படி என்பதை விளையாட்டுத்திடலில்தான்
நாம் முதலில் கற்றுக்கொள்கின்றோம். வாழ்க்கையிலேயே பல தோல்விகளை நாம் சந்தித்தே ஆகவேண்டும்.
பல ஏமாற்றங்களுக்கு முகம் கொடுத்தே ஆகவேண்டும். அவை இறுதி முடிவாக இருக்கக்கூடாது. அந்தத் தோல்விகள், ஏமாற்றங்கள்தான் வெற்றிக்கான படிகளாகும்.
எனவே, இன்றைய சூழ்நிலையிலே இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் என்றுமில்லாத அளவுக்கு அத்தியாவசியமானதாகும்" என்றார்.