பளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் பின்னணி என்ன? -

கிளிநொச்சி, பளையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காயமடைந்த நபரின் காயங்களே பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய சிவனாதன்மூர்த்தி சுரேந்திரன் என்பவர் வெடி குண்டு செயழிலக்க செய்யும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
சுரேந்திரன் நேற்றிரவு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பும் போது வீட்டிற்கு அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனினும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற பொலிஸார், மேற்கொண்ட சோதனையின் போது எந்தவொரு தடயப்பொருளும் கிடைக்கவில்லை.
துப்பாக்கி சூடு பட்டதாக கூறப்படும் நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையில் அவரது நெஞ்சுப்பகுதிக்கு அருகில் சைக்கிள் பந்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் காயமடைந்தவரின் நிலைமை ஆபத்தாக இல்லை என வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காயமடைந்தவர் வெடிகுண்டு செயழிலக்க செய்யும் பிரிவின் ஊழியர் என்பதனால் ஏதாவது சோதனையிடும் போது இடம்பெற்ற வெடிப்பாக இருக்கலாம் என பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லையெனில் தனிப்பட்ட பிரச்சினைக்கமைய யாராவது நபரால் சைக்கிள் பந்து பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்னர்