வட்டுவாகலில் கையளித்த உறவுகள் எங்கே? இராணுவத்தினரின் கையில் கொடுத்த என் அப்பா எங்கே?
போரின் இறுதியில் இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே என கோரி முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே? இராணுவத்தினரின் கையில் கொடுத்த என் அப்பா எங்கே? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வட்டுவாகல் பாலத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில் பெற்றோர்கள் இளைஞர்கள் குழந்தைகளென உறவுகளைத் தொலைத்த பலரும் கலந்துகொண்டனர்.
வட்டுவாகல் பாலம் வரையில் பேரணியாக சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதன்போது சொந்தங்களை கையளித்த இடத்தை காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீரால் நனைத்தனர்.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசிற்கு விலைபோயுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.