பூநகரி பிரதேச சபை செயலரை மிரட்டிய ஆளும் கட்சி குண்டர்கள் ?

கிளிநொச்சி , பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத கடைகளை அகற்ற சென்ற பூநகரி பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடையூறு விளைவித்தவர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் , இடையூறு விளைவித்த நபர்கள் எடுத்த காணொளிகளை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியில் நாச்சிக்குடா சந்திக்கு அருகாமையில் உள்ள அரச காணிகளுக்குள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு அனுமதியற்ற முறையில் தற்காலிக கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில இரும்பினால் ஒட்டப்பட்ட கடைகளாகவும் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச சபை செயலாளர் , வருமான வரி பரிசோதகர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்தர்கள் குறித்த இடத்திற்கு சென்று அனுமதியற்ற கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் அது தொடர்பிலான அறிவித்தல்களையும் கடைகளில் ஒட்டியுள்ளனர்.
அந்நேரம் , ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என நம்பப்படும் கும்பல் ஒன்று , அரச உத்தியோகஸ்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு , அவர்களை காணொளி எடுத்துள்ளார்கள்.
அவ்வாறு அவர்களால் எடுக்கப்பட்ட காணொளிகள் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளதன் அடிப்படையில், குறித்த கும்பலுக்கும் ஆளும் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் , குறித்த கும்பலின் ஆதரவிலையே அரச காணிகளில் சட்டவிரோத கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பூநகரி பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோத கட்டுமான பணிகள் , அரச காணிகளில் அத்துமீறிய செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பூநகரி பிரதேச சபை செயலாளர் ரத்தினம் தயாபரன் தெரிவித்துள்ளார்.