SuperTopAds

முல்லைத்தீவில் திங்களன்று பாாிய மக்கள் போராட்டம்.. வட்டுவாகல் பாலம் முடங்கும்.

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் திங்களன்று பாாிய மக்கள் போராட்டம்.. வட்டுவாகல் பாலம் முடங்கும்.

அரசிற்கு கால நீடிப்பு வழங்கியது பிழை சர்வதேசம் எமக்கான தீர்வினை தரவேண்டும் ! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 மார்ச் மாதம் எட்டாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆனது நேற்றுடன் 757 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 07.04.2019 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினுடைய இணைப்பாளர் அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று மாலை ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர் அந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதிகளிலும் ராணுவத்திடம் கையளித்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த காலங்களில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 

உடைய உறவினர்கள் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்களுடைய பதில் கூற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இலங்கை அரசாங்கத்தினால் எந்தவித தீர்வும் கிடைக்காத நிலையில் சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும் என்று கோரியும் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

 அந்தவகையில் அண்மையில் நடைபெற்ற ஜெனிவா அமர்வில் கூட தங்களுக்கு சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்க இல்லை எனவும் ஸ்ரீலங்கா அரசிற்கு காலநீடிப்பு வழங்கக்கூடாது என நாம் எத்தனையோ கவணயீர்ப்பு போராட்டங்கள் செய்து ஐ.நாவுக்கு மகஜர்கள் வழங்கியுள்ளோம். 

இதை கருத்தில்கொள்ளாது சர்வதேசம் ஸ்ரீலங்காக்கு காலநீடிப்பு வழங்கியுள்ளது.இதே போன்று எமது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அதற்கு எதுவித எதிர்ப்பு தெரிவிக்காது அதற்கு சாதகமாக தலையாட்டிப்போட்டு வந்துள்ளார்கள்.

ஸ்ரீலங்கா அரசிற்கு காலநீடிப்பு வழங்கியது பிழை என்று சர்வதேசம் ஏற்று எமக்கான தீர்வு தரவேண்டும் என்பதற்காகவும். எமது உறவுகளை வட்டுவாகலில்தான் இராணுவத்திடம் கையளித்தோம் என்பதனை சர்வதேசத்திற்கு காட்டுவதற்காகவும் முல்லைத்தீவு நகரத்திலிருந்து ஆரம்பித்து 

 வட்டுவாகல் வரைக்கும் ஊர்வலமாகச்சென்று தமது கவணயீர்ப்பு போராட்டத்தை செய்யவுள்ளதாகவும் அதற்கு அணைத்து மக்களையும் நலன்விரும்பிகளையும் பங்குகொள்ளுமாறும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.