SuperTopAds

கலப்புப் பொறிமுறைக்குள் சிக்கவைக்க சதியா ? - மணிவண்ணன் எச்சரிக்கை

ஆசிரியர் - Admin
கலப்புப் பொறிமுறைக்குள் சிக்கவைக்க சதியா ? - மணிவண்ணன் எச்சரிக்கை

முன்னாள் முதலமைச்சர் ஆரம்பித்து வைத்திருக்கின்ற கலப்புப் பொறிமுறை தொடர்பான விவாதம் சர்வதேச விசாரணை பற்றி பேசாது கலப்புப் பொறிமுறைக்குள்ளேயே தமிழ் மக்களைச் சிக்கவைக்கும் தந்திரோபாயமாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் சர்வதேச விசாரணை எனும் நிலைப்பாட்டிலிருந்து எவர் மாறினாலும் அவர்கள் தொடர்பில் மக்களிடம் புரிதலை ஏற்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவின் முன்னாள் நீதிபதியான பகவதி ஆணைக்குழுவை உதாரணமாகக் கொண்டு கலப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்கவேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் இன்று யாழ் ஊடக அமைத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து தமது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்திபோதே மணிவண்ணன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

“பொறுப்புக்கூறல் விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது தெளிவான நிலைப்பாட்டை கடந்த காலங்களில் இருந்து வெளிப்படுத்தி வந்திருக்கிறது.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற விடயங்களில் சர்வதேச நீதிமன்ற பொறிமுறை ஒன்றின் ஊடாக விசாரணைக்குட்படுத்தி நீதி காண வேண்டும், தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், தமிழ் மக்கள் சந்தித்தஇழப்புக்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் போன்ற விடயங்களையும் இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு பொறுப்பான நபர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதனையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆணித்தரமாக வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் அண்மையில் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து சிறிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கலப்பு பொறிமுறை ஒன்றை இங்கே அமைக்க வேண்டும் என்று நீதியரசர் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். அதுவும் மகிந்த ராஜபக்ச அவர்களது காலத்தில் உருவாக்கப்பட்ட பகவதி நீதி பொறிமுறையை அதாவது இந்திய முன்னாள்  நீதியரசரான பகவதி தலைமையில் உருவாக்கப்பட்ட நீதிவிசாரணையை முன்னுதாரணமாக காட்டி ஒரு கலப்பு பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

 பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற வேறு விடயங்களையும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் நாங்கள் முப்பது ஒன்று தீர்மானத்தையே 2015ஆம் ஆண்டில் இருந்து  எதிர்த்து வருகின்றோம். ஏனெனில் இலங்கை அரசாங்கம் ஒரு உள்ளகப் பொறிமுறையையே ஏற்படுத்துவோம் எனக் கூறிவருகின்றது.  சட்டத்தில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது தன்னுடைய வழக்கில் தான் நீதிபதியாக இருக்க முடியாது. இது மிகவும் அடிப்படையானது. நாங்கள் சட்டம் படிக்கின்ற பொழுது முதல் வகுப்பிலேயே கூறப்படுகின்ற விடயம் தனது வழக்கில் தான் நீதிபதியாக இருக்க முடியாது என்பதுதான்.

கலப்பு முறையில் அவர்களது வகிபாகம் என்ன என்பது கூட தெளிவாக இல்லாத நிலையில் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்ற அல்லது உருவாக்கி இருக்கின்ற இந்த விவாத அரங்கு நிச்சயமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

 தமிழ் மக்களுடைய நிலைப்பாடுகளை தலைகீழாக மாற்றுகின்ற அல்லது கலப்பு பொறிமுறை சரியா பிழையா அல்லது கலப்பு பொறிமுறையை உருவாக்குவதா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாங்கள் வந்து விடுவோம்.

 கலப்புப் பொறிமுறை தேவையா இல்லையா அது பொருத்தமானதா இல்லையா என்ற விவாதம் மாறி கலப்புப் பொறி முறையை உருவாக்ாமா இல்லையா. அதற்கு சட்டத்தில் தடை இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான விவாதத்தில் நாங்கள் வந்து விடுவோம். இந்த விவாதத்திற்குள் வந்தால் மறைமுகமாக கலப்புப் பொறிமுறையை ஏற்றுக்கொண்டவர்களாக மாறி விடுவோம்.

 ஆகவே இந்த விவாதம் ஒரு தேவையற்ற விவாதம். இந்த விவாதம் இந்த நேரம் உருவாக்கப்பட்டிருப்பது தவிர்க்கப்பட வேண்டிய விடயம். அது கவலையளிக்கின்ற ஒரு விடயம்.  இன்றையதினம் அவர் வெளியிட்ட அறிக்கையில் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கின்றார். ஆனால் முன்னர் அவரது கைஒப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் கலப்புப் பெறிமுறை வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார். முப்பது ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் மிகத் தெளிவாக மிக ஆணித்தரமாக இருக்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிராக இளைக்கப்பட்ட போர்க்குற்றமாக இருக்கட்டும் இன அழிப்பாக இருக்கட்டும் அவை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய விடயம்.

 இந்த நிலைப்பாட்டிலிருந்து எவர் மாறினாலும் துரதிஷ்டவசமாக நாங்கள் அவர்களை எதிர்க்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாடுகளிலிருந்து அவர்கள் தொடர்பில் மக்களிடம் புரிதலை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் என்பதை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.” - என்றார்.