யாழ் மாநகரத்திற்கு கழிவகற்றலை மேம்படுத்துவதற்கான உதவியை வழங்கியது ஜப்பான் அரசு
யாழ் மாநகரில் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான வாகனங்கள் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை முதல்வராக பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற ஜப்பான் அரசாங்கத்தின் தூதுவர்களுடான சந்திப்பின் போது மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் முன்வைத்திருந்தார். மேற்படி கோரிக்கை தொடர்பில் சுமார் 11 மாதங்களாக தொடர்ச்சியான முயற்சிகளும், பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வந்தது.
முதல்வரின் இடைவிடாத தொடர் முயற்சியின் பயனாக ஜப்பான் அரசினால் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் பெறுமதியான (83, 432 அமெரிக்கடொலர்) உதவித்திட்டத்தை யாழ் மாநகரசபைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை கடந்த 2019.03.19 செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தில் இடம்பெற்றது.
இவ் ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனுல்ட் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். இவ் ஒப்பந்தத்தின் பிரகாரம் மாநகரசபைக்கு மீள்புதுப்பிக்கப்பட்ட நான்கு கழிவகற்றல் ட்ரக் வண்டிகள் வழங்கப்படவுள்ளன.
ஜப்பான் அரசின் இவ் உதவித்திட்டத்தின் மூலம் யாழ் மாநகரத்தின் திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகளை மிகவும் சிறப்பாகவும், முதல்வரின் வட்டார ரீதியான திண்மக்கழிவகற்றல் செயன்முறையை உள்ளடக்கிய புதிய பொறிமுறையை அமுல்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதுடன், சுத்தமான பசுமை மாநகரத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும்.
மேற்படி கைச்சாத்திடல் நிகழ்வில் ஜப்பான் தூதுவருடன் இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் முதன்மைச் செயலாளர் சேக் வரடனி (Sake Waratani) மற்றும் அரசியல் விவகார இரண்டாவது செயலர் (Takeshi Ozaki) உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.