நீதிக்காய் எழுவோம் பேரணிக்கு அரசியல் கடந்து ஆதரவு அளிப்போம்! - மாவை சேனாதிராஜா

ஆசிரியர் - Admin
நீதிக்காய் எழுவோம் பேரணிக்கு அரசியல் கடந்து ஆதரவு அளிப்போம்! - மாவை சேனாதிராஜா

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நாளை முன்னெடுக்கப்படும் “நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் சர்வதேசத்தை எட்ட வேண்டும் என்று தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதற்காக அரசியல் கடந்து அனைவரும் ஆதரவளிக்கும் முகமாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை உலக நாடுகளின், மனித உரிமைகள் சபையின் தலையீடுகள், கண்காணிப்பிலிருந்து விலகி விடும். இதற்கு இடமளிக்க முடியாது. ஐ.நா மனித உரிமைகள் சபை ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களின் அடிப்படையில் மேம்பட்ட காத்திரமான குறுகியகால அட்டவணையில் அத் தீர்மானங்களை முழுமையாக இலங்கை நிறைவேற்றுவதற்கு ஆணையாளரின் அறிக்கையில் அறுதியிட்டவாறு தீர்மானம் ஒன்று மார்ச் 20ல் நிறைவேற்றப்பட வேண்டும். அல்லது மாற்று வழிகள் அறிவிக்கப்பட வேண்டும் என வற்புறுத்துகிறோம்.

2018 ஐப்பசியில் மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டபோது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், ஐரோப்பிய யூனியன், பொதுநலவாய நாடுகள் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை, எச்சரிக்கை விடுத்தன. பொருளாதார உதவித் திட்டங்களை திரும்பப் பெற்றன. இலங்கை மீது பலவிதத் தடைகளை, நடவடிக்கைகளை அறிவித்தன.

இலங்கை உயர் நீதிமன்றின் முழு நீதியரசர்களும் ஜனாதிபதியின் ஜனநாயக அரசியலமைப்புக்கு மாறான நடவடிக்கைகளுக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர் என்பதை நினைவூட்டலாம். இத்தகைய நடவடிக்கைகள் ஏன் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் எடுக்க முடியாது என கேள்வி எழுப்புகின்றோம்?

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும்; 34/1 தீர்மானங்கள் ஆணையாளர் அறிக்கையில் கூறிய வாறும் குறுகிய கால அட்டவணைக்குள் இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றாதுவிட்டால் சர்வதேச, ஐ.நா சாசன வழிகளில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் வற்புறத்துவோம்.

இதற்கான பொருத்தமான தீர்மானங்களை எடுக்க மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள், ஐ.நா.சபை குறிப்பாக பாதுகாப்புச் சபை , வல்லாண்மை நாடுகளை இராஜதந்திர ரீதியில் நாம் ஒன்றுபட்டு வென்றெடுக்க வேண்டும்.

இதற்கான திட்டங்களையிட்டு தீர்மானிப்பதற்கு அரசியல் கட்சிகளை கடந்து நாம் செயல்பட வேண்டும். இவ் இலக்கைக் கொண்டுதான் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் அமைப்பு 16ஆம்,19 ஆம் நாள்களில் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வழைப்பைப் பற்றி நின்று இப் பேரணியை, ஜனநாயகப் போராட்டங்களை வரவேற்போம் என அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் பங்கு கொள்வோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு