ஓய்வு நிலை அதிகாரிகளை நிறுத்தி அரசியல் இலாபம் அடைய நினைக்கின்றது தமிழரசுக் கட்சி -
ஓய்வுநிலை அரச அதிகாரிகளை திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேசசபையிலும், நகரசபையிலும் விகிதாசார பட்டியலின் கீழ் நிறுத்தி இந்த சபைகளின் தலைவராக முற்படுவது தமிழரசுக் கட்சியின் அரசியல் வங்குரோத்து தனத்தை எடுத்துக்காட்டுகிறது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரமுகர் ம.வேணுதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை ஆதரித்து திருக்கோணமலை பெரியகடை செபஸ்தியார் புரத்தில் நேற்று கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையில் தமிழரசுக் கட்சியினால் நியமிக்கப்பட்ட 2 அமைச்சர்களும் மக்களுக்கு என்ன? எவ்வாறு பணியாற்றினார்கள் என்பதை நான் கூறினால் எனது நாக்கூசும்.
ஏழை பெற்றோர்களின் பிள்ளைகள் வாயை கட்டி, வயிற்றைக் கட்டி தூரத் தெரியும் எதிர்கால கனவுகளோடு பல்கழைக்கழகம் சென்று படித்து பட்டம் பெற்ற பின்னரும் வீதியோரங்களிலும், தற்காலிக கொட்டில்களிலும் அமர்ந்து போராடிய மாணவர்களிற்கு உரிய தீர்வை கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களை வைத்து அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும் இயலாத்தன்மையை என்னவென்று உரைப்பது?
மழைக்காலம் வந்தால் வாய்கிழிய கத்தும் மண்டூகம் போல தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்தித்து உணர்ச்சிபூர்வமான பேச்சுக்களையும், பத்திரிகை அறிக்கைகளையும் விட்டு விளிம்பு நிலை மக்களின் பெறுமதியான வாக்குகளை அபகரித்து அரசியல் சுகபோகம் அனுபவிக்கின்றவர்களை மக்கள் இனம் கண்டு கொண்டார்கள்.
இவர்களின் இந்த நாடகம் இந்த தேர்தலில் பலிக்காது. மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.