பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்புகிறது கூட்டமைப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு சிறப்புக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்தக் கடிதத்தை வரையும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என்றும், அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று மாலை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினரும், புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, இலங்கை மீது சர்வதேச சமூகத்தின் மேற்பார்வை அவசியம். போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை அவசியம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிட்ட வேண்டும். கால அவகாசத்தை வழங்காது ஐ.நா. தீர்மானத்தை குப்பைத்தொட்டியில் போட்டுவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றுப் பகல் 11 மணிக்கு இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.