யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த 250 மில்லியன் ரூபாய் செலவில் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் வர்த்தக மையம்

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த 250 மில்லியன் ரூபாய் செலவில் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் வர்த்தக மையம்

யாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மையம் ஒன்றை அமைப்பதற்காக இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதென யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களான மாலிக் சமரவிக்கிரம, நளின் பண்டார ஜயமஹா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் இந்திர மல்வத்த மற்றும் இலங்கை அரசின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளர் எஸ்.ரி. கொடிகாராவினால் அலரிமாளிகையில் வைத்து இந்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசினால் வழங்கப்படும் உதவிகளின் வரிசையில் இத்திட்டமும் ஒன்றாகும்.

இவ் வர்த்தக மையமானது வடமாகாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்சார் சேவைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் உதவும்.

இவை தவிர, இந்திய அரசினால் அபிவிருத்தி மற்றும் புனர்நிர்மாணம் மற்றும் மீள்குடியேற்றத்தினை மேம்படுத்தும் முகமாக வடமாகாணத்தில் 46,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்திய அரசின் நிதியுதவியினால் இம் மாகாணத்தில் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களான யாழ். கலாச்சார மையம், 27 பாடசாலைகளுக்கான கட்டிடங்கள், 3000 மழை நீர் சேகரிப்பு தொகுதிகள், 600 வீடுகளைக் கொண்ட 25 மாதிரிக் கிராமங்கள் ஆகியன அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில் நாடு முழுவதும் 70ற்கும் மேற்பட்ட மக்கள நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 20 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய அரசாங்கத்தின் இலங்கைக்கான 3 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியானது மானிய உதவியாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு