"தகவல்களை திருட புது யுக்தியை கையாளும் ஐபோன் செயலிகள்" - எச்சரிக்கை விடுத்த ஆப்பிள் நிறுவனம்!
ஐ.ஓ.எஸ். செயலிகளை பயன்படுத்துவோர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அசைவுகளையும் சில செயலிகள் ரகசியமாக பதிவு செய்கின்றன. இந்த செயலிகள் உங்களது ஐபோன் ஸ்கிரீனினை உங்களின் அனுமதியின்றி பதிவு செய்வது கண்டறியப்பட்டுள்ளது.
ஐ.ஓ.எஸ். செயலிகள் உங்களது ஸ்கிரீனினை பதிவு செய்வதை உங்களால் கண்டறியவே முடியாது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் பல்வேறு பிரபல ஐ.ஓ.எஸ். செயலிகள் கிளாஸ்பாக்ஸ் வழிமுறையில் செஷன் ரீபிளே எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.
இந்த தொழில்நுட்பம் குறிப்பிட்ட செயலிகளை பயன்படுத்தும் போது பயனரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மிகத்துல்லியமாக பதிவு செய்துவிடும். இதில் பயனரின் மிகமுக்கிய விவரங்களும் அடங்கும். அந்த வகையில் ஐ.ஓ.எஸ். செயலிகளில் செஷன் ரீபிளே வசதியை செயலிழக்கச் செய்ய ஐ.ஓ.எஸ். டெவலப்பர்களுக்கு ஆப்பிள் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இவற்றில் எந்த செயலியிலும் பயனரிடம் ஸ்கிரீனினை பதிவு செய்வதற்கான அனுமதியை கோருவதில்லை. பிரபல ஐ.ஓ.எஸ். செயலிகளான ஏர் கனடா மற்றும் எக்ஸ்பீடியா உள்ளிட்டவை கிளாஸ்பாக்ஸ் அனாலடிக்ஸ் கொண்டு இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு பயனர் அனுமதியின்றி அவர்களது ஸ்கிரீனினை பதிவு செய்வதில் தங்கும் விடுதிகள், பயண வலைத்தளங்கள், வங்கி, விமான சேவை மற்றும் இதர சேவை வழங்கும் செயலிகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
செஷன் ரீபிளே தொழில்நுட்பம் செயிலில் பயனர் மேற்கொள்ளும் ஒவ்வொரு க்ளிக், கீபோர்டு பதிவு, பட்டன் புஷ் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும். எனினும், பயனர் செயலியை பயன்படுத்தும் போது மட்டுமே இவ்வாறு செய்யப்படும் என்பது பயனருக்கு சற்று ஆறுதலான விஷயம் எனலாம்.
செயலிகளை ஒவ்வொரு வாடிக்கையாளரும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்யவே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என கூறப்பட்டது. எனினும், இவ்வாறு செய்யும் போது பயனரின் மிகமுக்கிய விவரங்களும் ஆப் டெவலப்பர் அறிந்து கொள்ள முடியும்.
பொதுவாக ஐ.ஓ.எஸ். செயலிகளை இயக்கும் பயனரின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் பதிவு செய்யப்பட்டதும், அவை ஆப் டெவலப்பரின் சர்வெர்களுக்கு அனுப்பப்படும். இதன்மூலம் எவர் வேண்டுமானாலும் பயனர் விவரங்களை இயக்க முடியும். செஷன் ரீபிளே தொழில்நுட்பத்தினை கிளாஸ்பாக்ஸ் போன்று பல்வேறு இதர நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.