மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகளை இணைக்க பேஸ்புக் திட்டம்
மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு இணைக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தொடர்ந்து தனித்தனியே இயங்கினாலும், இதன் உள்கட்டமைப்புக்களைக் கொண்டு வாடிக்கையாளர்கள் ஏனைய செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.
குறித்த மூன்று செயலிகளுக்கிடையே நடைபெறும் பரிமாற்றங்கள் (சாட்கள்) முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கான ஒப்புதலை பேஸ்புக் இதுவரை வழங்கவில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் சேவைகளை அதிகளவு பயன்படுத்த வைக்கலாம் என பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
குறுந்தகவல் அனுபவத்தை பொறுத்தவரை மக்களுக்கு வேகமான, எளிமையான, நம்பத்தகுந்த மற்றும் தனியுரிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என பேஸ்புக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது குறுந்தகவல் செயலிகளை முழுமையாக என்க்ரிப்ட் செய்து அவற்றை ஒவ்வொரு நெட்வொர்க் மூலம் மிக எளிமையாக தகவல் பரிமாற்றம் செய்ய வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்லபடுத்தும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் ஏனைய இரு செயலிகளை நிச்சயம் பயன்படுத்துவர் எனக் கருதமுடியாது. சில பயனர்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொண்டு மெசஞ்சரை இன்ஸ்டால் செய்யாமல் இருக்கலாம்.
மூன்று சேவைகளையும் இணைக்கும் போது வாட்ஸ்அப் பயனர்கள் ஏனைய செயலிகளான மெசஞ்சர் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய வாய்ப்பளிக்கும். இதுதவிர பேஸ்புக் தனது விளம்பரதாரர்களிடம் அதிக வாடிக்கையாளர்கள் தங்களது சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்க முடியும்.
இதன் மூலம் பேஸ்புக் விளம்பர வருவாய் அதிகரிக்கும். பேஸ்புக் சமூக வலைதளத்தை அதிகளவு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சேவைகளை ஒன்றிணைப்பதன் மூலம் பேஸ்புக் தனது போட்டி நிறுவனங்களான ஆப்பிள் ஐமெசேஜ் மற்றும் கூகுளின் மெசேஜிங் சேவைகளுக்கு போட்டியை பலப்படுத்த முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.