மிக நீண்டகாலத்தின் பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் நவீன துறைமுகம்..

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடற்றொழில் அமைச்சினால் ஏற்கனவே இறங்குதுறைகள் அமைக்கவென தெரிவு செய்யப்பட்ட இடங்கள் பார்வையிடப்பட்டுள்ளன.
கடற்றொழில் அமைச்சினுடைய இறங்குதுறை நிர்மானிக்கும் பிரிவின் பணிப்பாளர் ரணவீர - பிரபாத், அவரது குழுவினுடைய அதிகாரிகளும் இணைந்தே இவ்வாறு இடங்களைப் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் வடமாகாணத்தின் நிலைபேறான மீன்பிடி அபிவிருத்தி என்ற திட்டத்தினுடாக ஆசிய அபிரிவித்தி வங்கியின் நிதியுதவியில் கடற்றொழில் அமைச்சு
வடமாகாணத்தில் துறைமுகங்கள் மற்றும், இறங்குதுறை போன்றவற்றினை அமைக்கவுள்ளது. அந்தவகையில் புவியியல் ரீதியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் துறைமுகம் அமைப்பதற்குரிய இடங்கள்
இல்லாத நிலையில், இறங்குதுறைகள், நங்கூரமிடும் தளங்கள் அதனோடு இணைந்த மீனவர்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மீன் ஏல வற்பனை நிலையங்கள்,
வலை திருத்தும் நிலையங்கள், இயந்திரங்கள் மற்றும் எண்ணெய்க்கான பாதுகாப்பு அறை, ஆண் பெண் மலசலகூடம், சிறிய வெளிச்சவீடு,
தண்ணீர் தாங்கி, கிணறுகள், உள்ளக வீதிகள், சந்தை போன்றவையும் இத் திட்டத்தில் அமைக்கப்படவுள்ளன. இதற்கென முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக படகுகளைக்கொண்ட துறைகளான
கொக்கிளாய், சிலாவத்தை, தீர்த்தக்கரை, கள்ளப்பாடு தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, இரணைப்பாலை, மாத்தளன் ஆகிய இடங்கள் ஏற்கனவே இறங்குதுறை நிர்மாணிக்கும் பிரிவினரால் தெரிவுசெய்யப்பட்ட நிலையில்,
28.01.2019இன்றைய நாள் குறித்த இடங்கள் பார்வையிடப்பட்டதுடன், அந்தந்தப் பகுதி கடற்றொழிலாளர்களுடன் குறித்த திட்டம்பற்றி கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
அத்துடன் குறித்த பார்வையிடும் பணிகளில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன், மாவட்ட கடற்றொழில் உத்தியோகத்தர்களான பா.ரமேஸ்கண்ணா,
க.கணேஸ்வரன் ஆகியோருடன் கடற்றொழிலாளர்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.