SuperTopAds

முல்லைத்தீவு- செம்மலை விகாரை விவகாரம் விடாப்பிடியாக நிற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- செம்மலை விகாரை விவகாரம் விடாப்பிடியாக நிற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு..

முல்லைத்தீவு செம்மலைப்  பகுதியில் உள்ள நீராவிப்  பிள்ளையார் ஆலயத்தினை ஆக்கிரமித்து புத்தர் சிலை நிறுவுவது தொடர்பில். உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலணியினால் நேற்றைய தினம் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீராவிப் பிள்ளையார் ஆலயப் பகுதியினை 2016ம் ஆண்டுவரையில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருந்த நிலையில் இராணுவத்தினருடன் இணைந்து ஓர் பௌத்த துறவி அங்கே ஓர் புத்தர் சிலையினை நிறுவியிருந்தார் குறித்த பகுதியில் இருந்து 2016 இறுதியுடன் இராணுவத்தினர் அங்கிருந்து அகன்றபோதும் பௌத்த துறவி அப்பகுதியிலேயே தங்கியிருந்தார்.

இந்த நிலையில் அங்கே காணப்படும் பிள்ளையார் ஆலயத்தில் தற்போது பௌத்த துறவி ஓர் மிகப்பெரும் புத்தர் சிலையை நிறுவியுள்ளார். ஆனால் அக் கிராமத்தில் ஓர் பௌத்த குடும்பமும் கிடையாது . எனவே குறித்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு அச் சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராயா கோரியிருந்தார். இதன் பிரகாரமே குறித்த கடிதம் பொலிஸ்மா அதிபருக்கு செயலணியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு அதன் பிரதி வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் , மாவட்டச் செயலாளர் , நாடாளுமன்ற உறுப்பினர்  சாந்தி சிறீஸ்காந்தராயா ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதே நேரம் குறித்த விடயம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதன் நேற்றைய தினம் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினை காங்கேசன்துறையில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதோடு இதற்கான தீர்விற்கு வழிநேற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.