SuperTopAds

அரசியல் மாற்றங்களை இந்தியா எப்படி பார்க்கிறது?

ஆசிரியர் - Admin
அரசியல் மாற்றங்களை இந்தியா எப்படி பார்க்கிறது?

புதுடில்லியில் இருந்து ஆர்.பாரதி

லங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட அதிரடியான அரசியல் மாற்றம் சர்வதேச ரீதியில் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இரவோடு இரவாக புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக அறிவித்தார்.

அரசியலமைப்புக்கு முரணாகவும் பாராளுமன்ற பெரும்பான்மையை கவனத்தில் கொள்ளாமலும் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை இலங்கை அரசியலில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் அதேவேளையில் சர்வதேசத்தின் கவனத்தை திருப்பி இருக்கின்றது.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில் பாராளுமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஜனாதிபதி தரப்பினர் தடுமாறிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. புதிய பிரதமரை நியமித்து அரசாங்கத்தை அமைத்த பின்னர் பாராளுமன்ற பெரும்பான்மை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக் கொண்ட பின்னர் பிரதமரையும் அரசாங்கத்தை நியமிப்பது ஜனநாயக மரபு. ஆனால் அதற்கு முரணாக அரசாங்கத்தையும் பிரதமரை நியமித்த பின்னர் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற முற்படுவது பெருமளவு அரசியல் பேரங்களுக்கு வழிவகுக்கின்றது.

இந்தியாவின்
நிலைப்பாடு என்ன?

இலங்கையில் இடம்பெறும் இந்த அதிரடியான அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை இந்தியாவும் நெருக்கமாக அவதானித்துக் கொண்டு இருக்கின்ற போதிலும் கூட உத்தியோகபூர்வமாக அது தொடர்பில் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை. இலங்கை நிலைமைகளை நெருக்கமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம் என்பது மட்டுமே இந்திய தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கருத்தாக இருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இடமிருந்து இலங்கை நிலைமை தொடர்பாக இந்த ஒரு வசனம் மட்டுமே வெளிவந்திருந்தது.

மேற்கு நாடுகளும் சர்வதேச சமூகமும் இலங்கை நிலைமைகள் தொடர்பாக தமது கருத்துக்களை அதிரடியாக வெளியிட்டு அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், நமது அண்டை நாடான இந்தியா இவ்விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை அறிவதில் அனைத்து தரப்புகளும் ஆர்வமாக இருந்தனர்.

காரணம் இலங்கையில் இடம்பெறக்கூடிய எந்த ஒரு அரசியல் மாற்றமும் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் இடம்பெறும் அரசியல் மாற்றங்கள் பிராந்திய அரசியல் நிலைமைகளை பிரதிபலிப்பதாக இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. இந்த நிலைமையில் தான் கொழும்பு அரசியல் நிலைமை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

அவதானமாக கருத்து
வெளியிடும் இந்தியா

கொழும்பு அரசியல் மாற்றங்கள் தொடர்பில் கருத்தை வெளியிடுவதில் இந்தியா மிகவும் அவதானமாக இருப்பதை புதுடில்லியில் இந்தியாவின் முக்கிய அதிகாரிகளை இரண்டு தினங்களுக்கு முன்னர் சந்தித்தபோது அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை தமது தரப்பில் இருந்து வெளியிடப்படும் கருத்துகள் பாதித்து விடக்கூடாது என்பதில் இந்தியத் தரப்பு மிகவும் அவதானமாக இருக்கின்றது..

புதுடில்லியில் இந்தியாவின் முக்கிய அதிகாரி ஒருவரை சந்தித்து இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றங்கள் தொடர்பிலும் அது தொடர்பாக இடம்பெற்றுவரும் அரசியல் சர்ச்சை குறித்தும் கேள்வி எழுப்பிய போது, ஒரு வரையறைக்குள் இருந்து கொண்டு பதிலளிப்பதற்கு அவர் முற்பட்டிருப்பது காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் ஜனநாயகம் பின்பற்றப்படும் என்பதில் நம்பிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்ட அந்த அதிகாரி நெருக்கடியான காலகட்டங்களிலும் இலங்கையில் ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் நடைபெறும் சம்பவங்கள் அடிப்படையில் ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதை குறிப்பிட்ட அவர், இங்கு நடைபெறும் அரசியல் விவகாரங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தார். அதாவது அரசியலமைப்பு நடைமுறைகள் மதிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவினுடைய நிலைப்பாடாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

இலங்கை அரசியலில்
சம்பந்தமில்லை

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச சில வாரங்களுக்கு முன்னர் புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்திருந்தார். இந்தப் பின்னணியில் கொழும்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களில் இந்தியா சம்பந்தம் இருக்கலாம் என்ற ஒரு கருத்து வெளியிடப்படுவது தொடர்பாக இந்திய அதிகாரியிடம் கேட்டபோது அதனை அவர் திட்டவட்டமாக அதனை மறுத்தார்.

இலங்கை விவகாரங்களில் இந்தியா சம்பந்தப்பட்டதாக இலங்கை மக்கள் நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை என குறிப்பிட்ட அவர் இது அடிப்படையில் இலங்கை விவகாரம் என்பதுடன் மற்றொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார். மஹிந்த ராஜபக்ஷ மட்டுமன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்கூட அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருந்தார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் மகிந்த ராஜபக்ஷவின் விஜயம் விசேடமானது ஒன்று அல்ல என்பதை சுட்டிக் காட்டுவதற்கும் அனைத்து தரப்பினருடனும் தான் தொடர்புகளை வைத்திருப்பதை குறிப்பிடுவதற்கும் இந்தியத் தரப்பினர் முற்பட்டிருப்பது புரிந்துகொள்ள முடிந்தது.

புதிதாக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற இந்தியா முன்வருமா என்ற கேள்வியை எழுப்பிய போது, அதிகாரத்தில் இருக்கக்கூடிய எந்தவொரு தரப்புடனும் நாம் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கின்றோம். ஆனால் இலங்கை மக்கள் தான் அதிகாரத்தில் இருக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதன்பின்னர் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்பதுதான் இந்தியத் தரப்பின் பதிலாக இருந்தது. இவ்வாறு நாம் கடந்த காலங்களிலும் பணியாற்றியுள்ளோம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ராஜபக்ஷவுடன்
பேசியது என்ன?

மகிந்த ராஜபக்ஷ அண்மையில் புதுடில்லியில் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கியமான பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இந்தப் பேச்சுக்களின் போது மத்தள விமான நிலையம், கொழும்பு துறைமுக நகரம் போன்ற விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டபோது, அவ்வாறு இல்லை என இந்திய அதிகாரி தெரிவித்தார். இருந்தபோதிலும் இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.

அதேவேளையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கத்தை இந்தியா அங்கீகரிக்குமா என கேள்வி எழுப்பப்பட்ட போது, இலங்கையில் இடம்பெறும் அரசியல் செயற்பாடுகள் எவ்வாறு செல்கின்றன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். முதலில் அங்குள்ள மக்கள் அந்த அரசாங்கத்திற்கு அங்கீகாரத்தை வழங்க வேண்டும். அதுதான் முதலாவது. அதன் பின்னர்தான் மற்றவர்கள் அங்கீகாரத்தை வழங்குவது என்பது இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

பதின்மூன்றாவது திருத்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அது உண்மையில் இலங்கை பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டதாகும் அதனை வலுப்படுத்துவதும் அதற்கு மேலாக செல்வதும் இலங்கையை பொறுத்த விடயம் என்பதையும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். அதற்கான செயற்பாடுகளை பாராளுமன்றமே முன்னெடுக்க வேண்டும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இதனை முன்னெடுப்பதில் ஒரு பொறுப்பு உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தார்கள். இது தொடர்பில் அவர்களிடம் தான் கேள்வி எழுப்பப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இலங்கையில் உருவாகியிருக்கும் அரசியல் சர்ச்சைகள் மாற்றங்கள் குறித்து கருத்து வெளியிடுவதை இந்தியா தவிர்த்துக் கொள்ளும் அதேவேளையில் அங்கு ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன என்பதை நெருக்கமாக அவதானித்து கொண்டிருப்பதையும் இந்திய அதிகாரிகளுடன் பேசிய போது உணரக்கூடியதாக இருந்தது.

Thanks: thinakkural.lk