எவ்விதக் குற்றமும் நிரூபிக்கப்படாமல் 5 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை பாரிய மனித உரிமை மீறல் எனச் சுட்டிக்காட்டு
ஆசிரியர் - Editor III
இந்தியச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாசீர் மௌலவியின் விடுதலைக்காகத் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் களமிறங்காதது ஏன்? – இலங்கை உலமா கட்சி கேள்வி
அனோஜன் விடுதலைக்காகக் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரின் மௌனம் ஓரவஞ்சனையானது: முபாறக் அப்துல் மஜீத்
மிக இறுக்கமான சட்டங்களைக் கொண்ட சவூதி அரேபியாவிலிருந்து சிவராஜா அனோஜனை விடுவிப்பதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகளும் சமூகமும் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட்டது போன்று, ஜனநாயக நாடான இந்தியாவின் திருச்சி சிறப்பு முகாமில் ஐந்து வருடங்களாக எவ்விதக் குற்றமும் நிரூபிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள நுவரெலியாவைச் சேர்ந்த யாசீர் மௌலவியின் விடுதலைக்காக எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ அல்லது முஸ்லிம் தலைமைகளோ களமிறங்காமல் இருப்பது ஏன் என இலங்கை உலமா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சவூதி அரேபியாவில் மரண தண்டனையிலிருந்து சிவராஜா அனோஜனை விடுவிப்பதற்காகப் பலரும் முன்வந்து செயற்பட்டனர். ஆனால், இந்தியாவின் திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நுவரெலியாவைச் சேர்ந்த யாசீர் மௌலவியின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கமோ, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவோ நேரடியாகக் களமிறங்காமல் இருப்பது மிகப்பெரிய ஓரவஞ்சனையாகும்.
சவூதி அரேபியாவில் அனோஜன் குற்றமிழைத்தவர் என்று நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவர் மன்னிப்புக் கோரியதன் அடிப்படையில் முஸ்லிம் சமூகம் அவரை மன்னித்து விடுதலைக்கு வழிவகுத்தது. ஆனால், யாசீர் மௌலவி எந்தவொரு குற்றமும் இழைக்காமலும், எவ்விதக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமலும் கடந்த ஐந்து வருடங்களாக இந்தியச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பாரிய மனித உரிமை மீறலாகும்.
சவூதி சிறையிலிருந்த அனோஜனுடன் தொலைபேசியில் உரையாடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால், இந்தியச் சிறையில் வாடும் யாசீர் மௌலவியுடன் தொலைபேசியில் பேச முடியாதா என்ற நியாயமான கேள்வி எழுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட்டால், தற்போதைய அரசாங்கத்திற்கும் அதன் மீதான அழுத்தமும் பொறுப்புணர்வும் ஏற்படலாம் என நாம் கருதுகின்றோம்.
இந்நிலையில், "அனோஜனைக் காப்பாற்றியது போன்று தன்னையும் காப்பாற்றுங்கள்" என யாசீர் மௌலவி திருச்சி சிறப்பு முகாமிலிருந்து உருக்கமான வீடியோ வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை அனைத்துத் தரப்பினரும் குறுகிய அரசியல் பேதங்களுக்கு அப்பால் மனிதாபிமான ரீதியில் நோக்கி, அவரது உடனடி விடுதலைக்காகக் களமிறங்க வேண்டும் என இலங்கை உலமா கட்சி வலியுறுத்தியுள்ளது.