SuperTopAds

ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற உரையை விமர்சிப்போர் முதலில் தமது அரசியல் தகுதியை உணர்ந்து கொள்ள வேண்டும்

ஆசிரியர் - Editor III
ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற உரையை விமர்சிப்போர் முதலில் தமது அரசியல் தகுதியை உணர்ந்து கொள்ள வேண்டும்

ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற உரையை விமர்சிப்போர் முதலில் தமது அரசியல் தகுதியை உணர்ந்து கொள்ள வேண்டும் 

மலிவான விளம்பரங்களுக்காகத் தேசியத் தலைமைகளைக் கொச்சைப்படுத்தும் போக்கைச் சமூகம் புறக்கணிக்க வேண்டும் 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களைப் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பவர்களும், அவரது பாராளுமன்ற உரையை விமர்சிப்பவர்களும் முதலில் அதற்குரிய தகுதி தமக்கு இருக்கின்றதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனப் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிடமிருந்து ஆளில்லா விமானங்களைக் (Drones) கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

 ஒரு கட்சியின் தலைமையோடும், நீண்டகால அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட ஒரு ஆளுமையோடும் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பதற்கு என்ன தகுதி வேண்டும் என்பதை விமர்சகர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். வெறுமனே ஒரு வாக்காளர் என்ற அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு தேசியத் தலைவர்களை விவாதத்திற்கு அழைப்பது அரசியல் நாகரிகமற்ற செயலாகும். ஒரு தேசியத் தலைமையுடன் விவாதிப்பதற்கு ஆழமான அரசியல் அறிவும், கொள்கைப் புரிதலும், மக்கள் செல்வாக்கும் அவசியம்.

 தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காகவும், சுயவிளம்பரத்திற்காகவும், சலுகைகளுக்காகவும் கட்சிகளோடு ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் இன்று சமூகத்தின் தலைவர்களை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. சாதாரணமாக ஐம்பது வாக்குகளைக் கூடத் தங்களால் சுயமாகப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள், பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கட்சியின் தலைவரைப் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பது அரசியல் அறியாமையின் உச்சமாகும்.

சர்வதேச ரீதியாக இஸ்ரேல் முஸ்லிம் நாடுகளையும், அப்பாவி மக்களையும் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வரும் இக்காலகட்டத்தில், இஸ்ரேலிடமிருந்து ஆளில்லா விமானங்களைக் (Drones) கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பாராளுமன்றத்தில் துணிச்சலாகக் குரல் கொடுத்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அவர் ஆற்றிய உரை, முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் சர்வதேச நிலைப்பாட்டையும் தெளிவாகப் பிரதிபலித்தது.

இத்தகைய சர்வதேச அரசியல் பின்னணியையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்ளாமல், தலைவரின் பாராளுமன்ற உரையை விமர்சிப்பது என்பது, மறைமுகமாக அரசாங்கத்தின் தவறான முடிவுகளுக்கும் இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்குவதற்குச் சமமானதாகும். எனவே, அரசியல் முதிர்ச்சியின்றி மலிவான விளம்பரங்களுக்காகத் தலைமைகளைக் கொச்சைப்படுத்தும் இவ்வாறான போக்குகளைச் சமூகம் தெளிவாகப் புரிந்துகொண்டு புறக்கணிக்க வேண்டும். தனிநபர் தாக்குதல்களை விடுத்து, பக்குவமான முறையில் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது

Radio