அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு - பிரான்ஸில் நாளை நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பாரிய போராட்டத்திற்கு அழைப்பு!

பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைந்த ஊதியம் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் மஞ்சள் அங்கி (Yellow Vest) இயக்கத்தினர் மற்றும் இளைஞர் அமைப்புகள் பலவும் பங்கேற்றுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சின் தகவலின்படி, நாடளாவிய ரீதியில் 106,000 பேர் போராட்டங்களில் பங்கேற்றுள்ளதுடன், தலைநகர் பாரிஸில் மாத்திரம் 24,000 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
எனினும், நாடு முழுவதும் சுமார் இரண்டு இலட்சம் பேர் போராட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும், பாரிஸில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் அண்மித்தோர் கலந்துகொண்டுள்ளதாகவும் மாணவர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை போராட்டங்களில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பிரான்ஸில் பாடசாலை முடக்கங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வித் தரம் வீழ்ச்சியடைதல், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, குறைந்த ஊதியம் மற்றும் காவல்துறையினரின் வன்முறை ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
போராட்டக்காரர்கள் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஆட்சிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இம்முறை போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் இடம்பெற்ற போதிலும், மார்செய்ல், லியோன், நான்ட்ஸ், போர்டோ மற்றும் பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, மார்செய்லில் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும் சுமார் 3,500 பேர் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
லியோன் நகரில் நடைபெற்ற போராட்டங்களில் சுமார் 8,000 பேர் பங்கேற்றுள்ளனர். அங்கும் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில், குறைந்தபட்ச ஊதியத்தை 0.6 சதவீதத்தால் அதிகரிப்பதாக அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி போதுமானதல்ல எனத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் அதனை நிராகரித்துள்ளன.
இதனையடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பாரிய வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்தத் திகதி, 2018ஆம் ஆண்டு எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மஞ்சள் அங்கி போராட்ட இயக்கத்தின் எட்டாவது ஆண்டு நிறைவுடனும் ஒத்துப்போகின்றது.
அந்தப் போராட்ட இயக்கம் அப்போது பிரான்ஸ் அரசாங்கத்துக்குப் பெரும் சவாலாக அமைந்ததுடன், சுமார் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்திருந்தது.
இம்முறையும் நாடு முழுவதும் சுற்றுவட்டப் பாதைகள் மற்றும் கட்டண அறவீட்டு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்க மஞ்சள் அங்கி இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், வாழ்க்கைச் செலவு மற்றும் ஊதியப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு பிரான்ஸில் ஆரம்பமாகியுள்ள போராட்டங்கள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




