SuperTopAds

இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்கம்

ஆசிரியர் - Editor II
இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்கம்

இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாழமுக்கமாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, குறித்த குறைந்த அழுத்தப் பிரதேசம் திருகோணமலையிலிருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் கிழக்குத் திசையில் நிலைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வளிமண்டலத் தொகுதியானது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் வடக்கே சாய்வாக வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று தாழமுக்கமாக வலுப்பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாளைய தினம் திங்கட்கிழமை மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறித்த வளிமண்டலத் தொகுதியின் தாக்கம் காரணமாக இன்று நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையுடனோ அல்லது இடியுடன் கூடிய மழையுடனோ கூடிய வானிலை நிலவக்கூடும்.

இதேவேளை, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் இயங்கும் பல நாள் மீன்பிடிப் படகுகளுக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வடக்கு அகலாங்கு 5 முதல் 15 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 90 வரையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஏற்கனவே குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Radio