'அக்போ' யானை உலாவும் திறப்பனை பகுதியில் துப்பாக்கிகள், ஹக்கபட்டாஸ் வெடிபொருட்கள் மீட்பு!

'அக்போ' கொம்பன் யானை அடிக்கடி உலாவும் திறப்பனை பகுதியில், வனஜீவராசிகளைப் பாதுகாக்கவும் மனித - யானை மோதலைக் குறைக்கவும் முன்னெடுக்கப்பட்ட 'ஹஸ்தி சேனா' விசேட தேசிய நடவடிக்கையின் போது, சட்டவிரோத துப்பாக்கிகள், பொறித் துப்பாக்கிகள், ஹக்கபட்டாஸ் வெடிபொருட்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
காட்டு யானைகள் மற்றும் 'அக்போ' யானையின் உயிரைப் பாதுகாப்பதோடு, சட்டவிரோத வேட்டையாடல்களைத் தடுத்து மனித - யானை மோதலைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கல்குலம, கெடமாாலகந்த, முரியாகடவல, பெரியமியன்குலம, கிரிந்தேகம, நிராவிய, தலகுலு விகாரை, நபடவெவ, வன்னன்குலம, ஒருக்கன்குலம மற்றும் குட்டிமடுவ உள்ளிட்ட பல பகுதிகளை உள்ளடக்கி இத்தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கைகளை சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி நேரில் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சன்ன சுரவீர தலைமையில் திறப்பனை வனஜீவிகள் அலுவலகத்தின் அதிகாரிகள், சுற்றாடல் அமைச்சின் ஆலோசகர் ரவீந்திர காரியவசம் உள்ளிட்ட பலரும் இதில் இணைந்து செயல்பட்டனர்.








