இரண்டாவது ஆண்டாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆய்வைப் புறக்கணித்த அமெரிக்கா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை நடத்தவிருந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த முடிவு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான பாகுபாடு காட்டப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, கடந்த ஆண்டு ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தனது மனித உரிமைகள் தொடர்பான ஆய்விலும் அமெரிக்கா பங்கேற்கவில்லை.
அமெரிக்காவின் பங்கேற்பு இல்லாததால், செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த ஆய்வுக் கூட்டம் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்படலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பணிகளில் பங்கேற்பது, அதன் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமையும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அமைப்பு தனது சொந்த மனித உரிமை மதிப்பீடுகளைக் கடைப்பிடிக்கத் தவறுவதாகவும் விமர்சித்துள்ளார்.
கருக்கலைப்பு, மரண தண்டனை தொடர்பிலும் கேள்விகள்
ஐ.நா.வின் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) திட்டத்தின் கீழ், 193 உறுப்பு நாடுகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தமது மனித உரிமைகள் நிலவரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்போது அமெரிக்காவிடம் கருக்கலைப்பு, மரண தண்டனை, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் இனப் பாகுபாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்பத் திட்டமிடப்பட்டிருந்தன.
அமெரிக்கக் குடிமக்கள் சுதந்திரங்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் அமெரிக்காவின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக சுமார் 200 அறிக்கைகளை ஐ.நா.விடம் சமர்ப்பித்துள்ளன.
அதேவேளை, அமெரிக்காவில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்கள் பல தலைமுறைகளில் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பங்கேற்பு இல்லாவிட்டாலும், அந்நாட்டின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிடம் விளக்கமளிக்குமாறு சில செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், அமெரிக்காவுடன் நேரடியாக முரண்படுவதற்கு பல நாடுகள் விரும்பாததால், இந்த விவகாரத்தில் உறுப்பு நாடுகள் எவ்வாறு செயல்படும் என்பது குறித்தும் இராஜதந்திரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.




