SuperTopAds

நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சம் - பிரதமர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு!

ஆசிரியர் - Editor IV
நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சம் - பிரதமர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சம் காரணமாக, அவரது பிரதமர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதாக முன்னாள் நெருங்கிய ஆலோசகர் நிர் ஹெஃபெட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் 103FM வானொலிக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நெதன்யாகுவின் முன்னாள் ஆலோசகரான நிர் ஹெஃபெட்ஸின் கூற்றுப்படி, யாஷர் கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், நெதன்யாகு தனது அதிகாரத்தை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளார்.

மேலும், அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நெதன்யாகுவின் மனைவி சாரா மற்றும் மகன் யாயிர் ஆகியோர் பிரதமர் அலுவலகத்திற்குத் தொடர்ச்சியாக அவசரத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தங்களது கவலையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசியல் பதற்றம் நெதன்யாகுவின் முடிவெடுக்கும் திறனிலும்"

தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஹெஃபெட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐசன்கோட் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நெருக்கமாகச் செல்லும் பட்சத்தில், அவரைத் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதற்காக நெதன்யாகு பல்வேறு அரசியல் சமரசங்களுக்கு முன்வரக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய அரசாங்கம் அமைவதைத் தாமதப்படுத்துவதற்காக ஒற்றுமை அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது நெதன்யாகுவின் அரசியல் உத்தியாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தனது ஊழல் வழக்குகளில் இருந்து சட்டப் பாதுகாப்பைப் பெறும் நோக்கில், பதவியில் இருக்கும் பிரதமருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை ஒத்திவைக்கும் வகையிலான 'பிரெஞ்சு சட்டத்தை' அறிமுகப்படுத்த நெதன்யாகு முயற்சிக்கக்கூடும் என்றும் ஹெஃபெட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பு காடி ஐசன்கோட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அரசியல் எதிர்காலம் தற்போது முக்கிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது.

Radio