அடர்ந்த மூடுபனி - 50 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து - பல்கேரியாவில் 12. பேர் பலி!

பல்கேரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள யம்போல் பகுதிக்கு அருகில் அமைந்த அதிவேக நெடுஞ்சாலையில், (10) அடர்ந்த மூடுபனி காரணமாக சுமார் 50 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகின.
இந்த கோர விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பிராந்திய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஏற்பட்ட இந்த தொடர் விபத்தில் சிற்றுாந்துகள் மற்றும் பாரவூர்திகள் நொறுங்கியும், கவிழ்ந்தும் வீதியை விட்டு விலகியும் தீப்பிடித்த நிலையில் காணப்பட்டன.
பலத்த மூடுபனி காரணமாக பார்வைத் திறன் 50 மீற்றருக்கும் குறைவாக இருந்ததே விபத்துக்கு முதன்மை காரணம் என விபத்தில் சிக்கி உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
வாகனங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதாக யம்போல் பிராந்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை ஆய்வாளர் தோடோர் மிஷினேவ் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த தருணத்தில் எரியும் சிற்றுாந்தில் இருந்து ஒருவரை மீட்டதாக கூறிய நேரில் கண்ட சாட்சி ஒருவர், "முன்பகுதியில் நிலவிய அடர் மூடுபனியால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்டன. என் கண்முன்னே பலர் உயிரிழந்தனர்.
தீப்பிடித்த சிற்றுாந்தின் கண்ணாடியை உடைத்து ஒருவரை வெளியே மீட்டேன். பின்னர் மற்ற வாகனங்களும் மோதிக்கொள்வதைக் கண்டு வீதியை விட்டு ஓடி தப்பித்தேன்" என அச்சத்துடன் விவரித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை பல்கேரிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




