SuperTopAds

உலகைச் சுற்றும் சுற்றுலாக் கப்பலான ‘ஒடிஸி’ சிங்கப்பூரில் பறிமுதல்!

ஆசிரியர் - Editor IV
உலகைச் சுற்றும் சுற்றுலாக் கப்பலான ‘ஒடிஸி’ சிங்கப்பூரில் பறிமுதல்!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக, சுமார் 200 பயணிகளை கம்போடியாவில் தவிக்கவிட்ட உலகைச் சுற்றும் சுற்றுலாக் கப்பலான ‘ஒடிஸி’ (Odyssey), சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் தற்போது சிங்கப்பூர் துறைமுக எல்லைக்குள் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பல், மூன்றரை ஆண்டுகளில் 150 நாடுகளுக்குச் சென்று உலகைச் சுற்றும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், எரிபொருள் செலவு அசாதாரணமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, கப்பலின் இயக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அதன் உரிமை நிறுவனமான Villa Vie Residences அறிவித்தது.

இதனையடுத்து, கடந்த மாதம் கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தில் இருந்த சுமார் 200 பயணிகள் கப்பலிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் துறைமுக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், கப்பலில் உள்ள பணியாளர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கப்பல் பணியாளர்களின் நலன்புரி நடவடிக்கைகளை அதன் கடனாளிகள் நிர்வகித்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கப்பலில் அறையொன்றை முழுமையாகக் கொள்வனவு செய்தல், ஐந்து வருட வதிவிட வசதியைப் பெற்றுக்கொள்ளுதல் அல்லது சில நாட்களுக்கான சுற்றுலாவுக்கு அறையொன்றை வாடகைக்கு எடுத்தல் ஆகிய தெரிவுகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Radio