மூன்று வல்லரசுகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திக்கத் திட்டம்!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டு ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் ஒன்றாக சந்தித்துப் பேசுவதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகச் சீனா முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், வரி விதிப்புகள் மற்றும் யுக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முரண்பாடுகள் நிலவி வரும் சூழலில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் சீன ஜனாதிபதி ஜின்பிங் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப், ஜின்பிங் மற்றும் புதின் ஆகியோரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளுடன் சீனா தீவிரமாக விவாதித்து வருவதாகச் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் சீனாவின் ஷென் சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (APEC) உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மூன்று முக்கிய வல்லரசு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசுவது சர்வதேச அரசியல் அரங்கில் ஒரு வரலாற்றுச் சாதனையாகவும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வாகவும் அமையும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.




