நற்பிட்டிமுனையில் பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் 60 இலட்சம் ரூபா செலவில் மின்தறி இயந்திரங்கள் வழங்கி வைப்பு !!

நற்பிட்டிமுனையில் பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் 60 இலட்சம் ரூபா செலவில் மின்தறி இயந்திரங்கள் வழங்கி வைப்பு !!
பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நற்பிட்டிமுனை பிரதேச பயனாளிகளுக்கான நெசவு உற்பத்தி வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்,60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மின்தறி இயந்திரங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.





நற்பிட்டிமுனை பிரதேசத்திற்கான பாராளுமன்ற உறுப்பினரின் ஒருங்கிணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளருமான ஆசிரியர் பிர்னாஸ் அவர்களின் நெறிப்படுத்தலிலும் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, கல்முனை பிரதேச செயலாளர் திரு. ரி.எம்.எம். அன்சார் அவர்களின் தலைமையில் நற்பிட்டிமுனை ஆலையடி தெற்கு வீதியிலுள்ள நிலசெவ கட்டிடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மின்தறி இயந்திரங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்நிதியின் ஊடாக, பயனாளிகளின் சுயதொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தி, நெசவுக் கைத்தொழில் உற்பத்தியை மேம்படுத்துவதுடன், குடும்பப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீத், திட்டமிடல் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஏ.பி.எம். அஸ்ஹர், சமூக வலுவூட்டல் குழுக்களின் தவிசாளர்கள், செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




