SuperTopAds

சவூதி – பாகிஸ்தான் – துருக்கி பாதுகாப்பு கூட்டில் இணையும் ஈரானும்!

ஆசிரியர் - Editor IV
சவூதி – பாகிஸ்தான் – துருக்கி பாதுகாப்பு கூட்டில் இணையும் ஈரானும்!

சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஈரானும் இணைய வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷெரீப் சௌத்ரி, இந்த ஒப்பந்தத்தில் ஈரான் இணைவதற்குத் தடையில்லை என்றும், அதற்கான முடிவு சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசியல் தீர்மானத்தைப் பொறுத்தது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக, ஒக்டோபர் 26ஆம் திகதி தெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீர், சவூதி பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் மற்றும் துருக்கி உளவுத்துறைத் தலைவர் இப்ராஹிம் கலின் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பதற்றத்தைக் குறைப்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஏனைய உறுப்பு நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.

எனினும், ஈரான் இதுவரை இந்தக் கூட்டணியில் உத்தியோகபூர்வமாக இணையவில்லை. அதற்கான விண்ணப்பமோ அல்லது ஒப்பந்தமோ உறுதிப்படுத்தப்படவில்லை.

ஈரானின் இணைவு குறித்த பேச்சு தற்போது ஊகமாகவே உள்ள நிலையில், அது மத்திய கிழக்கின் பாதுகாப்புச் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

Radio