அபுதாபியில் இன்று ஆரம்பமாகும் சர்வதேச எரிசக்திக் கண்காட்சி!

அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் சர்வதேச பெட்ரோலியக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு (ADIPEC) இன்று (02) கோலாகலமாகத் தொடங்குகிறது.
உலகளவில் எரிசக்தித் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது பிரத்தியேக அரங்குகளை அமைக்கின்றன.
மேலும், எரிசக்தித் துறையில் தடம் பதித்து வரும் 2,260 உலகளாவிய நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.
தொடக்க விழாவில் அமீரக தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமது சுல்தான் அல் ஜாபர் முக்கிய உரையாற்றவுள்ளார்.
அத்துடன், அமீரக எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறை அமைச்சர் சுகைல் பின் முகம்மது அல் மஸ்ரூயி, 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டு எதிர்கால எரிசக்தித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து உரையாற்றவுள்ளனர்.
170-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 2 இலட்சத்து 39 ஆயிரத்திற்கும் அதிகமான சர்வதேச வல்லுநர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு அபுதாபி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொத்தம் 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி வரும் 5-ஆம் திகதி நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.




