கிழக்கு சிரியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு - 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு!

கிழக்கு சிரியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 7 பேர் காயமடைந்துள்ளதோடு, 4 பேர் மாயமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ள நீர் தேங்கியிருந்த பகுதிகளில் மூழ்கியே 5 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக சிரியாவின் அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ரயீத் அல்-சாலே தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மற்ற இருவரில் ஒருவர் வீதி விபத்தினால் உயிரிழந்துள்ளதுடன், ஏழாவது நபரின் உயிரிழப்பு குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் மாயமானவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.




