SuperTopAds

அமெரிக்க - ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய இராஜதந்திர முயற்சி!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க - ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய இராஜதந்திர முயற்சி!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுத்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

எனினும், இரு தரப்புகளுக்கும் இடையே முக்கியமான முரண்பாடுகள் தொடர்வதால், போர் மீண்டும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

கத்தார் மத்தியஸ்தர்கள் முன்வைத்துள்ள புதிய சமாதான முன்மொழிவுக்கு ஈரான் இந்த வார இறுதிக்குள் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முயற்சியில் பாகிஸ்தானும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

புதிய முன்மொழிவின்படி, இரு தரப்புகளும் ஏழு நாட்களுக்குள் படிப்படியாக நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் திட்டம் தொடர்பாக ஈரானின் அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளதால், உடன்பாடு எட்டப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்கா தனது பிராந்திய நட்பு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர், ஈரான் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்ற சாத்தியத்தை முன்னிட்டு சில மத்திய கிழக்கு நாடுகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

மறுபுறம், ஈரான் மீதான தாக்குதல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் அதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால், மோதல் மீண்டும் பிராந்தியத்தின் பல நாடுகளுக்குப் பரவக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது

Radio