துபாயின் உலகின் முதலாவது மற்றும் மிக நீளமான தங்க நடைபாதை, 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும்!

டுபாயில் 24 கரட் தங்கத்தால் அமைக்கப்படும் உலகின் முதலாவது மற்றும் மிக நீளமான தங்க நடைபாதை, 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இந்த நடைபாதை, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என அதன் வர்த்தகப் பிரிவின் மூத்த பணிப்பாளர் ரஷீத் அல் ஹர்மூதி தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதுடன், தங்க வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையில் டுபாயின் சர்வதேச முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதேவேளை, டுபாயில் உள்ள தனியார் நகை நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய இந்திய ஜிமிக்கி காதணிகள், உலகின் மிக அதிக எடையுள்ள தங்கக் காதணிகள் மற்றும் மிகப்பெரிய காதணிகள் என இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளன.
டுபாயின் டெய்ரா பகுதியில் அமைந்துள்ள கோல்ட் டிஸ்ட்ரிக்ட், தங்கம், நகைகள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் 1,000க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களைக் கொண்டுள்ளது.
இந்தத் தங்க நடைபாதை திறக்கப்படுவதன் மூலம், டுபாயின் சுற்றுலாத்துறைக்கும் தங்க வர்த்தகத்திற்கும் மேலும் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது




