SuperTopAds

கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு - 10,000ஐக் கடந்த தொற்றாளர்கள்!

ஆசிரியர் - Editor IV
கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு - 10,000ஐக் கடந்த தொற்றாளர்கள்!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 10,000ஐக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தநாட்டின் பொது சுகாதார நிறுவனத்தின் அண்மைய தரவுகளின்படி, இதுவரை 10,060 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 4,887 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரிதான புண்டிபுக்யோ  வகை எபோலா வைரஸ் காரணமாக இந்தத் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த மே மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்ட இந்தப் பரவல், கொங்கோவில் பதிவான மிகப் பெரியதும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுமான எபோலா பரவலாக மாறியுள்ளது.

இதற்கிடையில், கொங்கோவிலிருந்து ஏனைய ஆபிரிக்க நாடுகளுக்கும் வைரஸ் பரவக்கூடிய அபாயம் குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கென்யாவில் இந்த மாதம் முதல் எபோலா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஒன்பது தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கொங்கோவிலிருந்து உகண்டா ஊடாக கென்யாவுக்குச் சென்ற ஒருவர் நைரோபியில் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தத் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, குறித்த பெண்ணும் அவரது கணவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வானூர்தி மூலம் சுவிட்சர்லாந்திலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அதேபோல, உகண்டாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில் 20 எபோலா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கொங்கோவிலிருந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் உகண்டாவில் எபோலா பரவல் முடிவடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கொங்கோவுக்குப் பயணம் செய்துவிட்டு உகண்டாவுக்குத் திரும்பும் பிரஜைகள் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என உகண்டா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை மேற்கு ஆபிரிக்காவில் பரவிய எபோலா தொற்றே வரலாற்றில் மிகப் பெரிய பரவலாகக் கருதப்படுகிறது. அக்காலப்பகுதியில் 28,600க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளானதுடன், 11,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Radio